“ரிங்கு சிங் உள்ள இருக்கவரைக்கும் என்னால ஈஸியா இருக்கவே முடியல, இந்த வருஷமே அவருக்கு ஸ்பெஸல் தான்” – க்ருனால் பாண்டியா பேட்டி!

0
3722

இந்த வருடமே ரிங்கு சிங்கிற்கு ஸ்பெஷலாக இருந்திருக்கிறது. அவர் களத்தில் இருக்கும் வரை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்று பேட்டியளித்தார் க்ருனால் பாண்டியா.

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் பலப்பரிச்சை மேற்கொண்டன. இருவருக்குமே இது வாழ்வா சாவா போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தடுமாற்றம் கண்டது.

கடைசியில் வந்த ரிங்கு சிங், அணியை சரிவிலிருந்து மீட்டு 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசி லக்னோ அணிக்கு பயத்தை உண்டாக்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக 1 ரன்னில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் லக்னோ அணி நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

உச்சகட்ட அழுத்தத்தில் இருந்த க்ருனால் பாண்டியா, கடைசியில் லக்னோ அணி 1 ரன்னில் வென்றபின் நிம்மதி பெருமூச்சுவிட்டார். இதுகுறித்து போட்டி முடிந்தபின் அவர் பேசுகையில்,

- Advertisement -

“முதலில் நிம்மதியாக இருக்கிறது. அழுத்தம் நிறைந்த போட்டியில் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் விளையாடினோம். இதற்காக வீரர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் 61/1 என்கிற நிலையில் இருந்தார்கள். இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் கட்டுப்படுத்தி வீசினால் ஆட்டத்திற்குள் வந்துவிடலாம் என்று உணர்ந்தேன். இன்று ஸ்பின்னர்களுக்கு நன்றாகவே எடுபட்டது.

இந்த சீசன் முழுவதுமே ரிங்கு சிங் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். அவர் களத்தில் இருக்கையில் எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது. இன்று மீண்டும் ஒருமுறை அதை காட்டிவிட்டார். இது போன்ற சூழலில் எங்களுடைய திட்டத்தை செயல்படுத்தினால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஒவ்வொரு பந்திற்கும் பவுலர்களிடம் சென்று பேசினேன். அவர்களுடைய திட்டத்தை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தினேன். அதை மீறியும் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிவிட்டால், அது நம் கையில் இல்லை எதுவுமே செய்ய முடியாது.

இன்று கடைசி ஓவரை யாஷ் வீசுமாறு கொடுத்ததற்கு காரணம் கடந்த இரண்டு ஓவர்களை நன்றாக வீசியிருந்தார். தனிப்பட்ட முறையில் நம்பிக்கையுடன் இருந்தார்.” என க்ருனால் பாண்டியா கூறினார்.