நடைபெற்று முடிந்த ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வெல்ல இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருந்த போதிலும் அவருக்கு இந்த உலகக்கோப்பை தொடர் சிறப்பானதாக அமையவில்லை. இந்த நிலையில் விராட் கோலி பற்றிய தன்னிடம் எழுப்பிய கேள்விகள் குறித்து ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.
விராட் கோலி குறிப்பிட்ட இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக ஏழு போட்டிகளில் விளையாடி 75 பந்துகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும் அவர் ஆட்டம் இழக்கும் முறை கவலை அளிப்பதாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு சிலர் அவருடைய இடத்தில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலை விளையாட வைக்கலாம் என்று பேசும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இப்படியான நிலையில் இறுதி போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உட்பட முக்கிய மூன்று விக்கெட்டுகளை பவர் பிளேவில் இழக்க, விராட் கோலி ஒரு முனையில் 48 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்து, முடிவில் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவருடைய பேட்டிங் பங்களிப்பு இந்திய அணி t20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. இதனால் ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியில் விராட் கோலி இருக்க வேண்டுமா? என பேச்சுகள் முன்பே ஆரம்பித்திருந்தது. பின்னர் அவர் விரும்பியபடி உலகக் கோப்பையில் ரன்களும் எடுக்க முடியவில்லை. இது குறித்து நான் என்ன நினைக்கிறேன்? அவர் பார்ம் பற்றி என்னுடைய கருத்து என்ன? என்று குறைந்தது என்னிடம் 10 முறையாவது கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
நான் என்னிடம் இந்த கேள்விகள் முன்வைக்கப்பட்ட எல்லா நேரத்திலும் விராட் கோலி சரியான நேரத்தில் பெரிய போட்டியில் நிச்சயம் திரும்பி வருவார் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியிருந்தேன். நான் சொன்னபடியே அவர் இறுதிப் போட்டியில் வந்து மிகச் சிறப்பாக விளையாடினார். அன்றைய நாளில் அவருக்கு அழுத்தம் இருந்திருக்கும், ஆனால் அதைச் சமாளித்து வென்றார்.
இதையும் படிங்க : சச்சின் முதல் கோலி வரை.. வறுமையில் கல்லறையில் தங்கியவர்.. இன்று இந்திய அணி கொண்டாடும் நபர்.. யார் இந்த ரகு?
அன்றைய நாள் அவருக்கு எளிமையாக இருக்கவில்லை. அன்று அவருடைய மெதுவான சர்வதேச டி20 அரைசதம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு அவர் கடுமையாக உழைத்தார். ஆனால் அதை எட்டியதும் அவர் ஆட்டம் வேறு மாதிரி மாறியது. இதுதான் அவர்களது அணிக்கு அன்று தேவையாகவும் இருந்தது. சூழ்நிலையை மதிப்பிடுவது மற்றும் சரியான வழிமுறையில் விளையாடுவதை அவர் சிறப்பாகச் செய்தார்” என்று கூறி இருக்கிறார்.