இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் கிரீசில் எடுக்கும் கார்ட் மாற்றம் என்ன மாதிரியான பிரச்சினைகளை அவருக்கு கொடுத்து வருகிறது? என்பது குறித்து ரிக்கி பாண்டிங் விரிவாக பேசியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் காயம் காரணமாக கில் விளையாடவில்லை. இதற்கடுத்து அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்கள் விளையாடி வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். தனக்கு கிடைக்கும் ஆரம்பத்தை பெரிய ரன்களாக அவரால் மாற்ற முடியவில்லை.
2020-21 ஆஸ்திரேலியா தொடர்
கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் தொடர் விளையாட சென்ற பொழுது கில் அறிமுகமானார். அவருக்கு அந்த அறிமுக தொடர் மிகவும் சிறப்பாகவே அமைந்தது. வரலாற்று சிறப்புமிக்க காபா வெற்றியில் கில்லின் பங்கு பெரிய அளவில் இருந்தது.
இந்திய அணி இளம் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு கில்லும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். எனவே இந்த முறை அவருக்கு ஆஸ்திரேலியா தொடர் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவருடைய பேட்டிங் அணுகுமுறை மிகவும் சுமாரான முறையில் அமைந்திருக்கிறது. இதனால் மிக சுலபமாக அவர் விக்கெட்டை இழந்து கொண்டிருக்கிறார்.
கில் செய்த மாற்றம்
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “எனக்கு கில் பேட்டிங் செய்வதை பார்க்க மிகவும் பிடிக்கும். அவர் சிறப்பான முறையில் விளையாடும் பொழுது உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தெரிவார். ஆனால் அவருடைய நம்பர்களை பார்க்கும்பொழுது அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது”
“நான் அவரை கவனித்துப் பார்த்ததில் அவர் இங்கு சில விஷயங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக போலன்ட் பந்து வீசும் பொழுது அவர் தனது கார்டை மாற்றினார். ஆப் ஸ்டெம்புக்கு நகர்ந்து வந்து விளையாடினார். இந்த நேரத்தில் போலன்ட் பந்தை ஃபுல்லாக நேராக டெம்புக்கு வீச கில் ஆட்டம் இழந்தார்”
இதையும் படிங்க : இந்தியா 4வது டெஸ்ட்.. காயம் பட்ட ஹெட் விளையாடுவாரா? – ஆஸி பயிற்சியாளர் ஓபன் பேட்டி
“ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அவர் தனது பேட்டிங் டெக்னிக்கில் இன்னும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர் தன்னைத்தானே இன்னும் நன்றாக ஆதரித்துக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் விளையாட தற்காப்பு யுக்தியை இன்னும் அதிகரிக்க வேண்டும். அவரால் அதிலிருந்து பெரிய ஸ்கோருக்கு செல்ல முடியும். மேலும் உலகில் எங்கு விளையாடும் பொழுதும் அவர் தாக்கி அதிரடியாக ரன்கள் எடுக்க விரும்புகிறார்” என்று கூறி இருக்கிறார்.






