இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எப்பொழுது இந்திய அணியுடன் இணைவார்? என்கின்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்த ஷமி இந்திய அணிக்காக கடந்த ஒரு வருடமாக விளையாட முடியாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் பெங்கால் அணிக்காக ரஞ்சி மற்றும் சையத் முஸ்தாக் அலி தொடரில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கிறார்.
பெங்கால் பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்
இந்த நிலையில் முகமது ஷமி குறித்து பேசி இருக்கும் பெங்கால் மாநில கிரிக்கெட் அணி பயிற்சியாளர் லக்ஸ்மி ரத்தன் சுக்லா கூறும்பொழுது “ஷமி பெங்கால் அணிக்காக கால் இறுதிக்கு முந்தைய போட்டியில் சண்டிகர் அணிக்கு எதிராக விளையாடுவார். அவர் எங்களுடன் நாளை பெங்களூர் வந்து இணைந்து கொள்வார். நாங்கள் கால்இறுதிக்கு தகுதி பெற்றாலோ அல்லது அதை தாண்டி சென்றாலோ அவர் கிடைப்பாரா என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்”
“அவர் ஏற்கனவே சுமார் 6 கிலோ எடையை குறைத்து இருக்கிறார்.மேலும் அவர் 13 நாட்களில் ஏழு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் கால் இறுதிக்கு முந்தைய போட்டியில் விளையாடினால் 14 நாட்களில் ஏழு டி20 போட்டிகளில் விளையாடியிருப்பார். ஷமி உள்நாட்டு கிரிக்கெட்டில் போதுமான அளவுக்கு விளையாடி தனது உடல் தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தெரிவிக்க விரும்பினார். அதன்படியே அவர் செயல்பட்டு இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
எப்போது இந்திய அணியுடன் இணைவார்?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷமி எந்த அளவுக்கு தேவையாக இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா எதிர்பார்த்த அளவுக்கு பிங்க் நிற பந்தில் செயல்படவில்லை. தற்போது ஷமி உடனடி தேவையாக இருக்கிறார்.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் ஏலத்துக்கு வந்தது பணத்துக்காகத்தான்.. எங்களுக்கு நடுவுல இதுவே நடந்தது – டெல்லி கோச் ஹேமங் பதானி பேட்டி
இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து பெயர் வெளியிடாத ஒரு அதிகாரி தெரிவிக்கும் பொழுது ” ஏற்கனவே முகமது ஷமியின் கிட் எல்லாம் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. எனவே அவர் ஆஸ்திரேலியாவிற்கு செல்வது என்பது உறுதியாக இருக்கிறது. பும்ரா இடத்திற்கு மாற்றாக அவர் நான்காவது டெஸ்ட் போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இணைவார்” என்று கூறியிருக்கிறார்.