இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய டி20ஐ அணியில் வாய்ப்பு அளிப்பதற்காக திலக் வர்மா அல்லது சிவம் துபே ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படலாம் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கணித்துள்ளார்.
சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் திறமையால் இந்திய பிளேயிங் லெவனில் தனக்கான இடத்தை விரைவில் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி தேர்வாளர்களுக்கு பிளேயர்ஸ் தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது.
துலீப் டிராபி தொடரிலும் சிறப்பாக ரன்கள் குவித்து, பௌலிங் செய்யும் திறனையும் காட்டியுள்ள வைபவ் சூர்யவன்ஷியை இனி மேனேஜ்மென்ட் அதிக காலம் அணியில் சேர்க்காமல் தள்ளி வைக்க முடியாது என தெரிகிறது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசும்போது, “திலக் வர்மா அணியின் வைஸ் கேப்டன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதற்கு முன்பும் வைஸ் கேப்டன்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். சிவம் துபே அனைத்து மேட்ச்களிலும் ரன்கள் அடிப்பது இல்லை, அவர் இன்னும் தன்னை நிரூபிக்க வேண்டும். பீல்டிங் அவரது பலவீனம், மேலும் அவர் ஒரு முழுமையான பௌலிங் ஆல் ரவுண்டர் இல்லை, பேட்டராக மட்டுமே விளையாடுகிறார். இன்னும் ஆறு மாதங்களில் திலக் அல்லது துபே ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள். ஒருவரை நீக்கிவிட்டு சூர்யவன்ஷி விளையாடுவார், இதை நான் இப்போதே சொல்கிறேன்.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது, “துலீப் டிராபி தொடரிலும் சூர்யவன்ஷி ரன்கள் அடித்துள்ளார். தனது கேமை அவர் மேம்படுத்தியுள்ளார். அங்கு அவர் பௌலிங் கூட செய்தார். சில ஓவர்கள் பௌலிங் செய்தால் அது தனக்கு கூடுதல் அட்வாண்டேஜ் என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார்.” என்று கூறி இருக்கிறார்.






