இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று முதல் போட்டியில், நாளை பார்படாஸ், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நேற்றைய பயிற்சியில் தென்பட்டிருக்கிறது.
நாளை இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் பார்படாஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் சுற்றில் மோதி இருந்தன. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 201 ரன்கள் எடுத்திருந்தது. எனவே இந்த மைதானம் முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என சொல்ல முடியாது.
மேலும் இந்த மைதானத்தை பொறுத்தவரையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகம் இருந்தாலும் பந்து நிச்சயம் திரும்பும். எனவே இதன் காரணமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் பிளேயிங் லெவன் அமைக்கப்படும் என்று தெரிகிறது.
நேற்றைய இந்திய அணியின் பயிற்சியில் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நீண்ட நேரம் இடைவிடாமல் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவருக்கும் தொடர்ந்து நிறைய பந்துகளை வீசினார். இதில் விராட் கோலி ஸ்லாக் ஸ்வீப் ஆடுவதில் அதிக கவனம் செலுத்தினார்.
இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது முகமது சிராஜ் வெளியேற்றப்பட்டு, குல்தீப் யாதவ் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாக இருக்கிறது என்று தெரிகிறது. மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் விளையாடுவார்கள் என்பதும் உறுதி.
இதையும் படிங்க : என்ன மனுஷன்யா.. வில்லியம்சன் எடுத்த 2 நெகிழ்ச்சியான முடிவு.. நியூசிலாந்து கிரிக்கெட்டில் திருப்பம்
இந்திய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர், ஒரு சுழல் பந்துவீச்சாளர், இரண்டு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என 6 பந்துவீச்சு ஆப்சனுடன் செல்லலாம். 6 பந்துவீச்சு ஆப்ஷன் இருக்கின்ற காரணத்தினால், விருப்பப்பட்டால் சிவம் துபேவை விளையாடலாம் இல்லையென்றால் அவருடைய இடத்தில் சாம்சனை விளையாட வைக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது






