தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்த காரணத்தினால் முதல் சுற்றோடு வெளியேறி விட்டது. இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்.
நியூசிலாந்து அணி தங்களுடைய பிரிவில் இடம் பெற்றிருந்த பெரிய அணியான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சிறிய அணியான ஆப்கானிஸ்தான் இரண்டு அணிகளிடமும் தோல்வியடைந்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இதில் சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் 100 ரன்கள் எட்ட முடியாமல் சுருண்டு தோற்றது.
இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் வழி நடத்தினார். அவருடைய பேட்டிங் அணுகுமுறை டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்றதாக இல்லை. எனவே இனி அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, அது குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை என்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும், மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் அணியை முன்னோக்கி முந்தி தள்ளி செல்வதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். இதற்கு தொடர்ந்து நான் பங்களிக்கவும் விரும்புகிறேன். இருந்தாலும் நியூசிலாந்தின் கோடைகாலத்தில் நான் வெளிநாட்டில் கிரிக்கெட் விளையாடும் ஒப்பந்தத்தில் இருப்பதால் என்னால் மத்திய சம்பள ஒப்பந்தத்தை ஏற்க முடியவில்லை.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது என்னுடைய பாக்கியம். அணிக்குத் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதில் என்னுடைய ஆசை இன்னும் குறையாமல் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டுக்கு வெளியே என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உள்நாடு வெளிநாட்டில் அனுபவங்களை அனுபவிப்பதும் இன்னும் எனக்கு முக்கியமான ஒன்று எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அந்த ஒரு நாள்.. என் கிரிக்கெட் வாழ்வில் ஆறாத வடுவாக இருக்கும்.. டேவிட் வார்னர் பேட்டி
கேன் வில்லியம்சன் இங்கிலாந்தில் நடக்கும் பிரான்சிசைஸ் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார். அதற்கு அவர் முன்னுரிமை தருகின்ற காரணத்தினால், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்தை அவர் ஏற்கவில்லை. கடந்த ஆண்டில் டிரெண்ட் போல்ட் இதே போல சம்பள ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.