இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அவருக்கு ஒரு பெரிய ஐபிஎல் அணியில் இருந்து மென்டராக அழைப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய ஏ அணி மற்றும் இந்திய அண்டர் 19 அணிகளுக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்று மிகப்பெரிய அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வந்தார். 2016 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தார்.
இதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் சவுரவ் கங்குலி இருந்த பொழுது அவருடைய கடுமையான வற்புறுத்தலின் காரணமாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வருவதற்கு ஒப்புக்கொண்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி மூன்று வடிவத்திலும் ஆரம்பத்தில் உலக கோப்பையை தவறவிட்டிருந்தது.
அதே சமயத்தில் ராகுல் டிராவிட் தன்னுடைய வழக்கமான புதிய முயற்சிகளை செய்வதின் மூலம் படிப்படியாக நல்ல இந்திய அணியை உருவாக்கி இருந்தார். இது காலப்போக்கில் இந்திய அணியை மேல் உயரத்திற்கு வர உதவியது. இதன் காரணமாக கடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றியது. ராகுல் டிராவிட்டின் வறட்சியும் பயிற்சியாளராக முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தற்போது அவரை நடப்பு ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கம்பீர் இடத்துக்கு மென்டராக கொண்டு வருவதற்கு அணுகி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் ராகுல் டிராவிட் இந்திய பயிற்சியாளராக வருடத்திற்கு 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்தார். அதைவிட பெரிய சம்பளத்தை தருவதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 20க்கு 19 தடவை இந்தியாவை ஜெயிச்சிருப்போம்.. இந்த இடத்துலதான் மிஸ் பண்ணிட்டோம் – ஜாக் காலிஸ் பேட்டி
ராகுல் டிராவிட் விட்டு வந்த இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டர் கவுதம் கம்பீர் செல்லும் வேளையில், அப்படியே திருப்பி ராகுல் டிராவிட் மென்டராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வருவது, ஒரு சினிமா போல இருக்கிறது என ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி ஒன்று நடந்தால் அது ஐபிஎல் தொடரில் மேலும் சுவாரசியத்தைக் கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை!