நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஸ்குவாடில் இளம் ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக சிறந்த பார்மில் இருந்து வந்த ஒரு இளம் பிளேயருக்கு அணியில் இடம் வழங்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வருத்தத்தையும் கண்டிப்பையும் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் இந்த சம்பவங்கள் அனைத்தும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 50 ஓவர் வேர்ல்ட் கப் தொடருக்குப் பிறகு ரோஹித் சர்மா ரிட்டயர்மென்ட் பெற்றால் மட்டுமே யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் தற்போதைய கரண்ட் பார்ம் மட்டுமே முக்கியம் என்பதால், அவர்கள் வைபவ் சூர்யவன்ஷியைக் கூட பரிசீலனைக்குக் கொண்டுவர வாய்ப்புள்ளது என்பதுதான் என் கவலை. சுப்மன் கில் விளையாடவில்லை என்றால், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஜெய்ஸ்வாலுக்குத்தான் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஏனெனில் இது அவருடைய கான்ஃபிடன்ஸை பாதிக்கலாம்.”
“உண்மையில் செலக்டர்கள் ஜெய்ஸ்வாலுக்கு அநீதி இழைத்துவிட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெஸ்ட் இண்டீஸில் இந்தியா வென்ற டி20 வேர்ல்ட் கப் ஸ்குவாடில் அவர் பேக்அப் ஓப்பனராக இருந்தார், இன்னமும் பேக்அப் ஓப்பனராகவே தொடர்கிறார். இப்போது ஸ்குவாடில் அவருக்கு இடமே இல்லை, நாம் வைபவ் சூர்யவன்ஷி பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஜெய்ஸ்வால் அணி நிர்வாகத்தின் திட்டத்திலேயே இருப்பது போல் தெரியவில்லை.”
“அவருடைய கான்ஃபிடன்ஸ் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக அவரது பேட்டிங்கை நீங்கள் பார்த்திருந்தால் தெரியும், அவர் முன்பு பேட்டிங் செய்த மாதிரி இப்போது செய்வது இல்லை. அவர் ஒரு ரன் மெஷினாக இருந்தார். அவருடைய கான்ஃபிடன்ஸ் பாதிக்கப்படுகிறது என்றால், சாத்தியமான இடங்களில் எல்லாம் அவருக்கு வாய்ப்பளிப்பது செலக்டர்கள் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் பொறுப்பாகும். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, அது அவருக்கு கிடைக்கவே இல்லை. அது மிகவும் அநீதியானது.”
“அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயராக வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஜெய்ஸ்வால் கடைசியாக எப்போது ஒருநாள் போட்டியில் விளையாடினார்? எப்போது டி20 போட்டியில் விளையாடினார்? எப்போது டெஸ்ட் மேட்ச் ஆடினார்? இலங்கையில் விளையாடிய டெஸ்ட் போட்டிதான் அவருடைய கடைசி போட்டி. அதற்குப் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் ஆடுவதே இல்லை. அவர் சிறந்த பார்மில் இருந்தார், எங்கு ஸ்டம்ப்ஸ் அமைத்தாலும் ரன்கள் குவித்துக்கொண்டிருந்தார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. செலக்டர்களும் டீம் மேனேஜ்மென்ட்டும் நிச்சயம் ஜெய்ஸ்வாலை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் ஒரு மிகச்சிறந்த திறமைசாலி” என்று கூறி இருக்கிறார்.