நேத்து நைட் அனுபவம் எவ்வளவு முக்கியம்னு ஆர்.சி.பி மும்பைக்கு காட்டியது- எம். ஐ நிர்வாகத்தை விளாசிய ஆஸ்திரேலியா வீரர்!

0
229
Tom Moody

பதினாறாவது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போட்டி நேற்று பெங்களூர் மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்தது.

இந்தப் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் நட்சத்திர வீரர்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள். ஆனால் இளம் இந்திய வீரர் திலக் வர்மா மட்டும் நிலைத்து நின்று விளையாடி 84 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்து அணியை 171 ரன்களுக்கு எடுத்துச் சென்றார்.

- Advertisement -

இந்த இலக்கு கொஞ்சம் சவால் தரக்கூடியது என்றாலுமே அடுத்து பெங்களூர் அணிக்கு துவக்கம் தர வந்த அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் பாப் டு பிளசிஸ் மிக எளிதாக விளையாடி இந்த இலக்கை அனாயசமாக அணியை எட்ட வைத்தார்கள். கேப்டன் பாப் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, விராட் கோலி 49 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்றார். பெங்களூரு அணியின் இந்த துவக்க ஜோடி முதல் விக்கட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. மேலும் இலக்கை பதினாறு புள்ளி இரண்டு ஓவர்களில் எட்டி அசத்தியது.

நடந்து முடிந்த இந்த போட்டி குறித்தும் மும்பை அணியின் செயல்பாடு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து டாம் மூடி பேசும்பொழுது
” நான் மும்பை அணிக்காக கவலைப்படுகிறேன். ஏனென்றால் தொடர் தொடங்குவதற்கு முன்பே இவர்கள் இறுதிப் போட்டியின் அருகில் இருக்க மாட்டார்கள் என்பதற்கான காரணங்களை நான் கூறியிருந்தேன். அவர்கள் அணியில் பல ஓட்டைகள் இருப்பதாக நான் உணர்கிறேன். அவர்களிடம் சம நிலையான அணி இல்லை. அவர்களிடம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பந்துவீச்சு ஆழமும் கிடையாது!” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அவர்களுடைய வெளிநாட்டு வீரர்களை எடுத்துப் பார்த்தால் அதுவும் சமநிலையில் இல்லை. அவர்களுடைய வெளிநாட்டு வீரர்கள் ஸ்லாட்டில் பிரிவிஸ், ஸ்டப்ஸ், டிம் டேவிட் போன்ற பவர் ஹிட்டர்கள்தான் இருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களுக்கான எட்டு இடங்களில் இவர்களை மூன்று இடத்தை எடுத்துக் கொண்டார்கள். இது எனக்குப் புரியவே இல்லை. இன்றிரவு ஆர்சிபி அணியில் அனுபவம் என்றால் என்னவென்று பார்த்தோம். இந்த அனுபவம் மும்பை அணியில் எங்கே?!” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்!

இது மும்பை அணியைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் தாஸ் குப்தா கூறுகையில் ” கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு அவர்கள் தேர்ந்தெடுத்த இளைஞர்களின் எண்ணிக்கையை பார்த்தால், இது ஒரு நீண்ட கால திட்டமாகத் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் நிகழ்காலத்திலும் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று அவர்கள் சொல்வது அது நல்ல விஷயம்தான்!” என்று தெரிவித்திருக்கிறார்!