நேற்று நடைபெற்ற ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் வீரர் விராட் கோலி குறித்து மற்றொரு ஆர்சிபி வீரரான தேவதத் படிக்கல் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதில் அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்கள் குவித்தார். அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணியில் விராட் கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 81 ரன்கள் குவித்து இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்த படிக்கல் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய அவர் விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
விராட் கோலி குறித்து அவர் கூறும் போது “என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் விராட் கோலி ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு வலைப்பயிற்சி அமர்வுக்கும் கொண்டு வரும் ஆற்றலும் தீவிரமும் தான். இந்த விளையாட்டில் சாதிக்கக்கூடிய அனைத்தையும் அவர் ஏற்கனவே சாதித்து விட்டார். இருப்பினும் தான் பங்கேற்கும் ஒவ்வொரு பயிற்சி அமர்விலும் போட்டியிலும் 100% அணிக்கு பங்களிப்பை வழங்குகிறார்.
அத்தகைய அர்ப்பணிப்பை காண்பது மிகவும் அரிது. ஒருவர் இந்த விளையாட்டின் மீது இவ்வளவு வேகத்துடனும் ஆர்வத்தோடும் இருப்பதை நாம் காணும் போது அணியில் உள்ள மற்றவர்களுக்கும் அந்த உணர்வை இயல்பாகவே சுற்றிக் கொள்கிறது. எனவே அணியில் உள்ள அனைவருக்கும் இத நிச்சயம் உதவியாக இருக்கிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.