நடப்பு 18வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலிக்காக வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவோம் என ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளுமே புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. மேலும் லீக் சுற்றில் இரண்டு அணிகளும் மோதிய இரண்டு போட்டியில் தலா ஒரு முறை வென்றன. இதற்கு அடுத்து முதல் தகுதி சுற்றும் போட்டியில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வெறும் 10 ஓவரில் எளிதாக வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?
ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பவுலிங் யூனிட் வலிமையாக இருக்கிறது. மேலும் ஒரு அணியாக சேர்ந்து அவர்கள் எல்லா போட்டிகளிலும் விளையாடுகிறார்கள். இதுவரை அவர்கள் வெற்றி பெற்றுள்ள ஒன்பது போட்டிகளில் 9 பேர் ஆட்டநாயகன் விருது வாங்கியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அணி ஒரு வீரரை நம்பி இல்லாமல் கூட்டாக சேர்ந்து விளையாடி வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் அவர்களுடைய பலம் பேட்டிங்காக இருக்கிறது. அதே சமயத்தில் அவர்களுடைய அச்சமற்ற பேட்டிங் அணுகுமுறை அவர்களுடைய பலவீனமாகவும் இருக்கிறது. ஆடுகளத்தில் ஏதாவது கொஞ்சம் வந்து வீச்சுக்கு சாதகம் இருந்தால் கூட பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடச் சென்று விக்கெட்டை கொடுப்பது கவலை அளிக்கிறது. இந்த வகையில் பார்க்கும்பொழுது ஆர்சிபி அணியின் கையே கொஞ்சம் ஓங்கி இருப்பதாக தெரிகிறது.
விராட் கோலிக்காக வெல்வோம்
நாளைய இறுதிப் போட்டி குறித்து பேசி உள்ள ரஜத் பட்டிதார் “நாங்கள் விராட் கோலிக்காக ஐபிஎல் தொடரை வெல்ல முயற்சி செய்வோம். ஏனென்றால் அவர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் மிகச் சிறந்த முறையில் விளையாடுகிறார். ஆர்சிபி போன்ற பெரிய அணியை இறுதிப்போட்டியில் கேப்டனாக வழி நடத்தும்போது இயல்பாகவே அழுத்தங்கள் வரும். ஆனால் நான் என் கையில் இருப்பவற்றில் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த கேப்டன் பொறுப்பு எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்து வருகிறது”
இதையும் படிங்க : மும்பை தோற்க காரணம் ஹர்திக் இல்ல.. கோச் ஜெயவர்த்தனேதான்.. ஆதாரத்த பாருங்க – ரசிகர்கள் கோபம்
“நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுடைய ரசிகர்கள் பெரிய அளவில் அங்கு திரண்டு வருகின்ற காரணத்தினால் அதை எங்களுடைய சொந்த மைதானம் என்று நாங்கள் உணர்கிறோம். அவர்கள் இந்த அன்பையும் ஆதரவையும் எங்களுக்கு பல ஆண்டுகளாக கொடுத்து வருகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






