தேர்தலில் பிசியாக இருந்தேன்.. இந்தியா விளையாடிய போட்டியை பார்க்கவில்லை – ஜடேஜா பேச்சு

0
143

இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான ஜடேஜா இன்று ரஞ்சிப் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடுகிறார். சென்னையில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாட்டு அணியை அவர் எதிர்கொள்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய ஜடேஜா தனது கிரிக்கெட்டில் உச்சகட்டத்தில் இருந்த போது காயம் ஏற்பட்டது மிகவும் ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.

காயத்திலிருந்து குணம் அடைய மூன்று மாதங்கள் ஆனதாக குறிப்பிட்ட ஜடேஜா, ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில் ஒரு போட்டியில் விளையாடி தனது பார்மை மீட்க வேண்டும் என்பதற்காக ரஞ்சிப் போட்டிக்கு திரும்பியதாக கூறினார். தான் மெல்ல மெல்ல முழு உடல் தகுதியை எட்ட முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்ட ஜடேஜா ரஞ்சிப் போட்டியில் தான் எந்த ஒரு அழுத்தத்தையும் கொடுக்காமல் ரிலாக்சாக தான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

காயம் அடைந்த தருணத்தில் கிரிக்கெட்டை பற்றி தான் யோசிக்கவே இல்லை என்று குறிப்பிட்ட ஜடேஜா, தேர்தலில் படு பிஸியாக இருந்ததாகவும் கூறினார். தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் இந்தியா விளையாடிய  பல போட்டிகளை தாம் பார்க்க வில்லை என்றும் ஜடேஜா கூறியுள்ளார். தேர்தலில் கவனம் செலுத்தியது தமக்கு உதவிகரமாக இருந்ததாகவும் ஜடேஜா கூறினார்.

தமது உடல் தகுதியை 100% எட்டிய பிறகு தான் பேட்டிங் பந்துவீச்சு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி பயிற்சி செய்வேன் என்றும் ஜடேஜா தெரிவித்தார். கிரிக்கெட்டில் யாரும் காயம் அடைய மாட்டார்கள் என்று 100% கூற முடியாது என்று குறிப்பிட்ட ஜடேஜா பயிற்சி செய்வது வேறு போட்டியில் விளையாடுவது வேறு என்று தெரிவித்தார். அதனால் தான் உடல் தகுதி பெறுவதற்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருப்பதாக ஜடேஜா கூறி உள்ளார். தற்போது இந்திய அணியில் அஸ்வின், அச்சர்பட்டேல், குல்தீப் யாதவ் என மூன்று சூழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஜடேஜா அணிக்கு திரும்புவது கொஞ்சம் கடினமாக இருக்கும்.