ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்று போட்டிகளை அமெரிக்காவில் விளையாடியது. இந்த நிலையில் அடுத்து வெஸ்ட் இண்டிஸ் மைதானங்களில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் பேசி இருக்கிறார்கள்.
இந்திய அணிக்கு அமெரிக்காவில் முதல் சுற்றில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காணப்பட்டது. இதன் காரணமாக மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றார்கள். மேலும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களையும் ஆல்ரவுண்டர்களாக கேப்டன் ரோஹித் சர்மா தேர்வு செய்தார்.
இதன் காரணமாக பிரதான சுழல் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாகல் இருவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் கூடுதலாக அணியில் இடம் பெற்ற சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டிஸ் சூழலில் விளையாட இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணியில் சில மாற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் எப்படி ஆனது என ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் பேசி இருக்கிறார்கள்.
இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா கூறும்பொழுது “வெஸ்ட் இண்டீஸ் இல் நாங்கள் விளையாடும் போதெல்லாம் ஆடுகளம் வறண்டும் மெதுவாகவும் காணப்படும். மேலும் அங்கு காலை நேரத்தில் நாங்கள் விளையாடுகின்ற காரணத்தினால் ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கும். இந்தியாவிலும் இதுபோன்ற நிறைய ஆடுகளங்கள் இருக்கின்றன. இது மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு நல்ல உதவியை கொடுக்கும். மேலும் இறுதிக்கட்ட ஓவர்களில் கூட சுழல் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதை நாம் பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இதுதான் டைம்.. கேரி பாகிஸ்தானை விட்டுருங்க.. திரும்ப இந்தியா அணிக்கு கோச்சா வாங்க – ஹர்பஜன் சிங் கோரிக்கை
குல்தீப் யாதவ் கூறும்பொழுது “வெஸ்ட் இண்டீஸில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என்கின்ற காரணத்தினால் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த பந்துவீச்சாளர்களின் லென்த் முக்கியம். நான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விளையாடினேன். அது சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருக்கும் தொடராக இருந்தது. எனவே நான் வரும் போட்டிகளை எதிர்பார்த்து இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






