2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்த ஒரு காரியம் நமக்கு இன்றும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஒன்றாகவும் நம்ப முடியாத ஒன்றாகவும் இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.
தற்போது இந்த ஆண்டு ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதன் முதல் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்த்து தங்களது சொந்த நாட்டில் விளையாடுகிறது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி குறித்த தன்னுடைய நினைவுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்து கொண்டார்.
புதிய அத்தியாயத்தை எழுதிய தோனி
இங்கிலாந்தில் 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்காக நடைபெற்ற இரண்டு பயிற்சி போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த முறையில் பேட்டிங் செய்து சதம் அடித்திருந்தார். எனவே இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் புதிய துவக்க ஆட்டக்காரராக தினேஷ் கார்த்திக் கொண்டுவரப்படுவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.
இப்படியான நிலையில் ஷிகர் தவான் உடன் ரோஹித் சர்மாவை துவக்க ஆட்டக்காரராக தோனி கொண்டு வந்தார். இன்று ரோஹித் சர்மா துவக்க வீரராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பல சாதனைகள் செய்து இந்திய அணியின் கேப்டனாக இருக்கவும் வழி வகுத்திருக்கிறது. மேலும் குறிப்பிட்ட அந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 20 ஓவர்களாக நடத்தப்பட்டது. அந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தோனி செய்த மேஜிக்
இந்த நிலையில் தோனி கேப்டன் பொறுப்பில் கடைசிக் கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட, இஷாந்த் ஷர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி நேரத்தில் நல்ல திருப்புமுனைகளை கொடுக்க இந்திய அணி பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்று 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோனதன் டிராட் விக்கெட்டை அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் மூலம் தோனி வீழ்த்தி இருப்பார். தற்போது இதற்கான திட்டம் எவ்வாறு தீட்டப்பட்டது? என்பது குறித்து அஸ்வின் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : 107 ரன்.. சுருண்டு ஒயிட் வாஷ் ஆன ஸ்மித்தின் ஆஸி.. குசால் மெண்டிஸ் அசலங்கா அபாரம்.. இலங்கை அணி தொடரை வென்றது
இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது “எனக்கு அந்தச் சம்பவம் இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. அப்பொழுது மஹி பாய் என்னிடம் வந்து டிராட்டுக்கு ஓவர் தி டெம்பில் இருந்து வந்து வீச வேண்டாம், ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து பந்து வீசு என்று கூறினார். மேலும் அவர் பந்தை லெக் சைடில் ஆட முயற்சி செய்யும் பொழுது, அந்தப் பந்து நன்றாக திரும்பினால் அவர் ஸ்டெம்பிங் ஆக வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். நான் அவர் சொன்னபடியே பந்துவீசினேன் அடுத்து அவர் சொன்னபடியே நடந்தது. இதை அவர் எப்படி முன்கூட்டியே கணித்தார்? என்று எனக்கு இப்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.