நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றி மற்றும் பேட்டிங் அதிரடி குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் பேசியுள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அளித்த 199 ரன்கள் இலக்கை இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ரன்களும் குவித்து பவர்ப்ளேவில் 118 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.
இந்த தொடர் வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் இந்த அதிரடி பேட்டிங் வரிசையை எதிர்த்து எந்த ஒரு பந்துவீச்சு கூட்டணியாலும் கட்டுப்படுத்த முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் இதுபோன்று பேட்டிங் செய்தால் அவர்களுக்கு எதிராக விளையாட முடியாது என்று கூறி நியூசிலாந்து புகார் அளிக்கப்போவதாக கேள்விப்பட்டேன். இந்திய பேட்டர்கள் இதுபோன்று தங்களை அடித்து நொறுக்கினால் அடுத்த போட்டியில் விளையாட மாட்டோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்திய பேட்டிங் வரிசையில் எந்த ஒரு பந்துவீச்சையும் துவம்சம் செய்யும் அளவிற்கு ஆழம் இருக்கிறது. இந்திய டாப் திரீயின் நல்ல நாளில் எதிரணிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் போய்விடும். பிளாக் கேப்ஸ் வேறு ஏதேனும் தொப்பியை அணிய வேண்டும், ஏனெனில் இந்திய அணி பிளாக் கேப்ஸை பார்த்தாலே வெறித்தனமாகிவிடுகிறது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங் குறித்து அவர் பேசும்போது “இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களும் விளையாடியிருந்தால் இந்த இருவருடன் (அபிஷேக் மற்றும் சூர்யவன்ஷி) சேர்ந்து 300 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பார்கள். இந்த இருவரின் பார்ட்னர்ஷிப்பில் பவுலர்கள் மாட்டிவிட்டால் அவர்கள் காலிதான். இந்தியாவிடம் மட்டுமே இத்தகைய பவர்ஃபேர் உள்ளது. இந்த தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வெல்லும் என்று நான் நினைத்தேன். ஆனால் தற்போதுள்ள இந்த இந்திய பேட்டிங் லைன்-அப் மூலம் நியூசிலாந்து ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியும் என்று எனக்கு தோன்றவில்லை” என்று கூறி முடித்து இருக்கிறார்.






