ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சென்னை அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கி விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மகேந்திர சிங் தோனி குறித்து சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.
மீண்டும் சிஎஸ்கேவில் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்ததற்கு தொடக்கத்தில் மகேந்திர சிங் தோனியின் பங்கு மிகப்பெரியது என்று கூறினால் அதில் மாற்றுக்கருத்து நிச்சயமாக இருக்காது. முதன் முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், அவரது திறமையை கண்டறிந்து தொடர்ச்சியாக தோனி வாய்ப்புகளை வழங்கினார்.
அதற்குப் பிறகு மெல்ல இந்திய அணியிலும் வாய்ப்புகளை கொடுத்த தோனி, இந்திய கிரிக்கெட்டில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் 100 டெஸ்ட் மற்றும் 500 விக்கெட்டுகள் என மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கும் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியின் போது தோனியை அழைக்க விரும்பியதாகவும் ஆனால் அது நடைபெறாமல் போனதாகவும் சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.
எம்எஸ் தோனிக்கு நன்றி
இதுகுறித்து அஸ்வின் கூறும் போது ” எனது 100வது டெஸ்ட்க்கு நினைவு பரிசை வழங்க தோனியை அழைத்தேன். அப்போது அதை எனது கடைசி டெஸ்ட் போட்டியாகவும் மாற்ற முயற்சி செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் தோனியால் வர முடியவில்லை. இருப்பினும் என்னை மீண்டும் சிஎஸ்கேவுக்கு அழைத்துச் செல்லும் பரிசை அவர் எனக்கு வழங்குவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இது மிகவும் சிறந்த ஒன்றாகும். இதை செய்த எம்.எஸ். தோனிக்கு நன்றி நான் சென்னை அணிக்கு திரும்ப வந்ததில் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:நான் செஞ்சது பெரிய தப்பு.. அப்படி நான் பண்ணியிருக்க கூடாது.. ஐபிஎல் குறித்து மகேந்திர சிங் தோனி
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு சென்னை அணியால் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே ஏலத்தின் போது பெரிய போட்டி இருந்தாலும் அஸ்வினை சிஎஸ்கே விடும்படியாக இல்லை. இறுதி வரை போட்டி போட்ட சென்னை அணி கடைசியாக இந்த தொகைக்கு அஸ்வினை வெற்றிகரமாக வாங்கியது. சென்னை மைதானத்தில் சுழற் பந்துவீச்சில் அஸ்வினின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.






