இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் துவங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் மொத்தம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக அணியில் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் வருண் சக்கரவர்த்தி சிறப்பான ஃபார்மில் இருப்பதால் வாய்ப்பு கிடைக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் நம்புகிறார்.
வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு இருக்கிறது
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நாம் அனைவரும் வருண் சக்கரவர்த்தி சாம்பியன் டிராபி இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். நான் அவருக்கு அங்கு வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். அவர் இதை செய்யக்கூடும் என்று நான் நம்புகிறேன். தற்போது சாம்பியன்ஸ் டிராபிக்கு அனைத்து அணிகளுமே தற்காலிக அணியை மட்டுமே அறிவித்திருப்பதால் இதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்?”
“ஆனால் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை வெளியேற்றிவிட்டு இவரைக் கொண்டு வந்தால் ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் ஆகிவிடுவார்கள். எனவே வேறு முறையில்தான் யாரையாவது நீக்க வேண்டியது இருக்கும். என்ன நடக்கிறது? என்று பார்க்கலாம்”
இது நடந்தால் வாய்ப்பு உண்டு
“இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வருண் சக்கரவர்த்தி விளையாட வைக்கப்படலாம் என்று நான் நினைக்கிறேன். அவரை நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கூட்டிச் செல்வது எளிதான காரியம் என்று நான் நினைக்கவில்லை. அவர் இன்னும் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. எனவே முன்னதாகவே ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம்”
இதையும் படிங்க : யுவராஜ் சிங் தவான் உடன் 5 நாள் பயிற்சி.. லாராவின் அக்கறை.. அபிஷேக் சதம் வந்தது எப்படி? – தந்தை பேட்டி
“அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால் அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்படுவது கடினமான விஷயம். இதையெல்லாம் தாண்டி அவர் முதல் முறையாக தொடர் நாயகன் விருது வாங்கியதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது டி20 கிரிக்கெட்டின் சக்கரவர்த்தி அவர்தான். அவர் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.