இந்திய அணி ஒரே மைதானத்தில் துபாயில் விளையாடுகின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு எந்த விதமான நன்மையும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாத காரணத்தினால் தனது போட்டிகள் அனைத்தையும் துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகிறது. மற்ற அணிகள் வெவ்வேறு மைதானங்களுக்கு சென்று விளையாடுகின்றன. இதன் காரணமாக இந்திய அணிக்கு கூடுதல் நன்மை கிடைப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
கம்மின்ஸ் ஆரம்பித்த பிரச்சனை
இதுகுறித்து நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் முதலில் விமர்சனத்தை முன் வைத்தார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் சிலர் இந்திய அணி மீதான குற்றச்சாட்டை வைத்தார்கள்.
இதற்கு பதில் அளித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “போட்டியை வெல்வது என்பது விளையாடுவதின் மூலம் நடப்பது சாக்கு சொல்வதால் கிடையாது. இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் திரும்பத் திரும்ப இதை கேட்பதை பார்த்தால் சிரிப்பு வருகிறது. 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்கா எல்லா போட்டிகளையும் செஞ்சூரியன் மைதானத்தில் விளையாடியது. ஆனால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனால் இந்திய அணி இந்த துபாய் மைதானத்தில் கோவிட்டுக்கு முன்பு விளையாடியது”
சொந்த அணி மீது சேற்றை இறைக்க வேண்டாம்
“மற்ற அணிகள் யுஏஇ சென்று விளையாடி இருக்கின்றன. ஆனால் இந்தியா சென்று விளையாடியது கிடையாது. எனக்கு ஒரு அணியை தெரியும், அவர்கள் இந்தியா வந்து நான்கு போட்டிகளை தோற்றார்கள். உடனே ஆடுகளம் சரியில்லை என்று சொன்னார்கள். நீங்கள் எப்பொழுதும் உங்கள் சொந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அடுத்து நம் நாட்டின் பெருமையான விஷயம் கிரிக்கெட். எனவே அடுத்தவர் பேச்சைக் கேட்டு நம் நாட்டுப் பெருமை மீது சேற்றை இறைக்க வேண்டாம்”
இதையும் படிங்க : IND vs NZ பைனல்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அந்த மாற்றம் நடக்குமா.. நியூசி பிளான் உடையுமா?
“இந்திய அணி இறுதிப் போட்டியில் வெல்கிறது அல்லது தோற்கிறது, ஆனால் போட்டி முடிவில் வில்லியம்சன் அல்லது சான்ட்னர் யாரிடமாவது கேட்டால் இந்திய அணி நன்றாக விளையாடியது என்று சொல்வார்கள். அதனால்தான் நியூசிலாந்து அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கம்பீரமானவர்கள், ஜென்டில்மேன்கள். இதன் காரணமாகத்தான் நியூசிலாந்து அணி வென்றால் கூட இந்திய ரசிகர்களுக்கு பிரச்சினையாக இருப்பதில்லை” என்று கூறியிருக்கிறார்.






