தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் விளையாடிய இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்று இலக்கை நோக்கி களம் இறங்கிய திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் கோப்பையை முதல்முறையாக அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்ச்சியாளர் ராகுல் டிராவிட் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் 52 ரன்கள் விளாசி திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கேப்டன் அஸ்வின் தொடர் குறித்த குறித்து சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது ” இந்த வெற்றியானது ஒரு வேகத்தில் நிகழ்ந்த சம்பவமாக தோன்றுகிறது. ஏனெனில் சேலம் அணியிடம் தோல்வி அடைந்த ஒரே அணி நாங்கள்தான். இந்த சீசனை பொருத்தவரை தொடக்கம் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இருப்பினும் சரியான தருணத்தில் நாங்கள் வெற்றிகளை பெற தொடங்கினோம். எங்கள் வீரர் சரத்குமாரின் பங்கு என்பது மிக அதிகம்.அவரை மைதானத்தில் எங்கு நிறுத்தினாலும் ஜாண்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்து கொண்டே இருந்தார்.
இந்த சீசனைப் பொறுத்தவரை நான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று யோசித்தேன். எங்களது அணிக்கு தலைமை பயிற்சியாளர் கூட யாரும் இல்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் என இருவருமே எனது நண்பர்கள் தான். நான் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆட்டம் இழந்த போது பின் வரிசையில் இறங்கி விளையாட வைக்கலாமா? என்று கூட ஆலோசனை செய்தோம். ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்ததால் இந்த முடிவை ஆலோசனை செய்தோம்.
இதையும் படிங்க:ஹாட்ரிக் 50.. அஸ்வின் அதிரடியில் திண்டுக்கல் சாம்பியன்.. ஷாருக்கானின் கோவை தோல்வி.. டிஎன்பிஎல் 2024
கிரிக்கெட்டை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு பார்த்தால் நான் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து இருக்கிறேன். இளம் வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். சித்தார்த்தின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இவர் எதிர்காலத்தில் இடது கை ஸ்பின்னர் ஆக நிச்சயம் இருப்பார். டிஎன்பிஎல் எல்லாரும் பார்க்கிறார்களா? என்று கேட்டால் தெரியாது. ஆனால் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக சித்தார்த் செயல்பட்டதற்கு முக்கிய காரணம் டிஎன்பிஎல்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎல் தொடரில் முழுவதுமாக விளையாட வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இந்த சீசனில் முழுவதும் விளையாடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






