மகேந்திர சிங் தோனியால் சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்தவர்களில் முக்கியமானவர் ரவிச்சந்திரன் அஸ்வின். சிஎஸ்கே அணியின் வழியாக மகேந்திர சிங் தோனியின் மூலமாக இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்து இன்று மிகப்பெரிய லெஜெண்ட் வீரராக மாறி இருக்கிறார். தன்னை மகேந்திர சிங் தோனி எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தி ஆதரித்தார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2010 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தார். அதே ஆண்டு ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் பந்துவீச்சில் காயமடைந்த மகேந்திர சிங் தோனி சில போட்டிகளைத் தொடர்ந்து தவற விட்டார். இந்த நேரத்தில் ரெய்னா கேப்டனாக வழி நடத்தினார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நான் தோனியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாக அறிந்திருக்கிறேன். அவர் 2009 ஆம் ஆண்டில் எப்படி இருந்தார் தற்போது 2024 ஆம் ஆண்டில் எப்படி இருக்கிறார் செயல்படுகிறார் என்பதை நான் பார்க்கிறேன்.
2010 ஆம் ஆண்டு ஷேன் பாண்ட் பந்துவீச்சில் அவரது கையில் காயம் ஏற்படுகிறது இதனால் அவர் போட்டிகளை தவற விடுகிறார். அந்த போட்டியில் நான் பாண்ட் விக்கெட்டை கைப்பற்றினேன். அதே சமயத்தில் காயம் அடைந்து இருந்த தோனி அணியை விட்டு வெளியேறினார். பிறகு ரெய்னா சில போட்டிகளுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தினார்.
முத்தையா முரளிதரன் மற்றும் நான் இருவரும் ஒரே அணியில் விளையாடிய பொழுது, அந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னா என்னை பந்துவீச்சில் மிக தாமதமாக கொண்டு வந்தார். நான் பெங்களூர் அணிக்கு எதிராக இறுதிக்கட்ட ஓவர்களை வீச வேண்டியதாக இருந்தது. பிறகு மூன்று போட்டிகளில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிறகு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததும் அந்தப் பையன் வேண்டும் என்று என்னை கேட்டார் என்று நினைக்கிறேன். நான் மீண்டும் விளையாடும் வாய்ப்பைப் பெற்றேன். எனக்கு அவர் புதிய பந்தில் வீச வாய்ப்பு கொடுத்தார். ஆடம் கில்கிறிடுக்கு எதிராக நான் பந்து வீசினேன் மேலும் அவர் விக்கெட்டையும் சென்னையில் கைப்பற்றினேன்.
இதையும் படிங்க : ஆண்டர்சன் பிரியாவிடை போட்டியை அழிப்பேன்.. ஆஸிக்கு நடந்த அது இங்கிலாந்துக்கும் நடக்கும் – ஷாமர் ஜோசப் சவால்
தோனி என்னைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக பேட்டிங் பவர் பிளேவின் போது பயன்படுத்தி இருக்கிறார். இது அவருடைய மிகவும் கவர்ச்சிகரமான ஒரு நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன். அவர் என்னுடன் விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது அவர் எல்லாவற்றையும் மிக எளிமையாக வைத்திருந்தார்” என்று கூறியிருக்கிறார்.