கிரிக்கெட் உலகின் அரிதான வேகப்பந்துவீச்சாளர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டியுடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இளம் சூப்பர் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப் ஆண்டர்சனின் பிரியாவிடை நிகழ்ச்சியை அழிக்க விரும்புவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தில் 700வது விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றி இந்தச் சாதனையை செய்த முதல் வேகப் பந்துவீச்சாளராக 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் மாறினார். இந்த நிலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் சொந்த நாட்டில் நாளை துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டி உடன் ஓய்வு பெற முடிவெடுத்திருக்கிறார்.
அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களின் சாதனை மைதானமான கபா மைதானத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு தனி ஒரு வீரராக வெற்றி தேடித் தந்தவராக ஷாமார் ஜோசப் இருக்கிறார். மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் இளைஞர்களை டெஸ்ட் கிரிக்கெட் நோக்கி இழுத்து வருவதற்கான ஒரு கவர்ச்சியான கதாநாயகனாக உருவெடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் ஆண்டர்சன் பற்றி பேசும்பொழுது “ஆண்டர்சன் நிச்சயமாக ஒரு அற்புதமான வீரர். நான் எதிர்பார்த்த ஒரு வீரர். சர்வதேச வட்டத்தில் அவர் இவ்வளவு விக்கெட்டுகள் வைத்திருக்கும் பொழுது அவர் சிறந்தவராக தான் இருக்க முடியும். அதே சமயத்தில் நான் அவருடைய பிரியாவிடை நிகழ்ச்சியை அழிக்கவே விரும்புகிறேன். மேலும் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சுக்கு நல்ல இடம்.
இங்கிலாந்து அணியும் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் ஆசஸ் தொடரில் விளையாடுவதை பார்த்து நானும் அப்படி விளையாட நினைக்கிறேன். எல்லா வேலப்பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்து வந்து சிறப்பாக செயல்படுகிறார்கள். நானும் அதையே செய்ய விரும்புகிறேன்.
இதையும் படிங்க : அபிஷேக் நீங்க சதம் அடிச்சிருக்கலாம்.. ஆனா அந்த பையன் எல்லாத்தையும் மாத்திடுவான் – ஆர்சிபி கோச் எச்சரிக்கை
எங்களுடைய கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து நாங்கள் எங்களுடைய ஆற்றலை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறோம். எங்களால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நிச்சயமாக போட்டியிட முடியும்” என்று கூறி இருக்கிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் பிரியாவிடை நிகழ்ச்சியை அழிக்க விரும்புவதாக பேசி இருப்பதால், நாளை துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் வெளியில் இருந்து உருவாகி இருக்கிறது.






