வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி தங்களுக்கு மிகப்பெரிய இலக்காகவும் முன்மாதிரியாகவும் திகழ்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக் ஹெஸன் பாராட்டியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கு முன்பாக கராச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் மற்றும் பாகிஸ்தான் அணியின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இல்லாத நிலையிலும், சாஹிப்ஸாதா ஃபர்ஹான் தலைமையில் இந்த இளம்படை மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெஸன் பேசும்போது, “தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிதான் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது, அவர்களை எட்டிப்பிடிப்பதே எங்கள் முன்னால் இருக்கும் சவாலாகும். மேலும் பாபர் அசாம், ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இல்லாதபோதிலும், இது ஒரு சமநிலையான மற்றும் அதிரடியான அணியாகும். ஆசிய விளையாட்டு போட்டிகள் புதிய மற்றும் திறமையான வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு சிறந்த மேடையாகும். சாஹிப்ஸாதா ஃபர்ஹானுக்கு இது கேப்டன்சி அனுபவத்தைப் பெற மிகச் சிறந்த வாய்ப்பு,” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் பொறுப்பேற்றபோது டி20 கிரிக்கெட்டில் நாம் உலக அளவில் 8-வது இடத்தில் இருந்தோம். இப்போது 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம், கடந்த 15 மாதங்களில் 30 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளோம். பாகிஸ்தான் அணி மீது நமக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் டாப் 8 இடத்திலேயே இல்லாத ஒரு அணி, திடீரென எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்குச் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்,” என்று கூறி முடித்துள்ளார்.






