இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் கருத்துகளுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்பாக, 2027 உலகக் கோப்பைத் தொடரைக் கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவை நீக்கத் தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரான தேவஜித் சைகியா ரோஹித் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்து பாராட்டிப் பேசினார்.
இதன் காரணமாகத் தேர்வுக்குழுவின் முதன்மைத் தேர்வாளரான அஜித் அகர்கர் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, ரவி சாஸ்திரி இரண்டு மூத்த வீரர்களுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்போது “எனக்கு எது கோபத்தை ஏற்படுத்துகிறது தெரியுமா? நான் நேரடியாகவே சொல்கிறேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பற்றிய இந்த விவாதம் தான். அவர்கள் இருவரும் அணிக்குத் திரும்பி விட்டார்கள் என்கிறார்கள், அவர்கள் எங்கே போனார்கள் திரும்ப வருவதற்கு? அவர்களை அணியில் இருந்து நீக்க நினைப்பவர்கள் தங்களுடைய பதவியைப் பார்த்துக் கொள்ள வேண்டும், அவர்கள் தான் காணாமல் போவார்கள். இந்த இருவரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள்,” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “கடவுள் அருளால் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். கடந்த பத்தரை ஆண்டுகளாக அவர்கள் செய்த சாதனைகளுக்கு இது ஒரு மரியாதையாகும். அவர்களின் இந்த உலகக் கோப்பை கடைசித் தொடராக இருக்கலாம். ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருவரும் மாபெரும் நட்சத்திரங்கள், உலகளவில் ரசிகர்களை மகிழ்வித்த அவர்கள் இளம் வீரர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்,” என்று கூறி முடித்துள்ளார்.






