இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில்லின் தலைமையானது அணியில் ஒரு நல்ல சூழலையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி இருப்பதாக மூத்த பேட்டர் விராட் கோலி வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார்.
கில் அணியில் இணைந்தது முதலே இருவருக்கும் இடையே ஒரு சிறந்த நட்புறவு நிலவி வருகிறது. களத்திலும் களத்திற்கு வெளியிலும் வீரர்கள் பிரஷர் இன்றி மகிழ்ச்சியாக விளையாட இது வழிவகுக்கிறது.
மூத்த வீரர்கள் இயல்பாக சிரித்து மகிழும்போது இளம் வீரர்களுக்கும் எவ்வித பதற்றமும் இல்லாமல் ஆட்டத்தை அணுகும் நம்பிக்கை கிடைக்கிறது.
இதுகுறித்து விராட் கோலி பேசும்போது “நான் கில்லை அவர் அணிக்கு வந்த காலத்தில் இருந்தே அறிவேன். நாங்கள் எப்போதும் ஜாலியாக பழகி வருகிறோம். அவர் இப்போது கேப்டனாக இருக்கிறார். நான் பல காலம் அந்த இடத்தில் இருந்திருக்கிறேன். இப்போது சீனியர் பிளேயர். நாங்கள் சிரித்து மகிழும்போது மற்ற வீரர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம் வரும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “அதிக பிரஷர் உள்ள சூழ்நிலையிலும் அனைவரும் சிரித்து மகிழ்கிறோம். நாங்கள் களத்தில் ப்ரொபஷனலாக இருக்கும் அதே வேளையில், போட்டியைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. கில்லுக்கும் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று, எனக்கும் தெரியும். அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இவ்வளவு காலம் விளையாட முடியும். வெறும் எண்களுக்காக விளையாடினால் இலக்கை அடைய முடியாது” என்று கூறி முடித்தார்.






