இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து ஐந்தாவது டெஸ்ட் முடிவில் அறிவித்தால் அது குறித்து தான் எந்த ஆச்சரியமும் படப் போவதில்லை என்றும் அது சரியானது என்றும் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை சிட்னி மைதானத்தில் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு இதுவே சர்வதேச கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இன்று பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக வந்த கம்பீர் கடைசி டெஸ்டில் இன்னும் பிளேயிங் லெவன் உறுதி செய்யப்படவில்லை என்றும், கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா என்பது குறித்து நிலைமைகளை பார்த்துதான் சொல்ல முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் விளையாடுவதே இதற்கு மேல்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற அவரது பேச்சு பல குழப்பங்களை தற்பொழுது ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டனுக்கு பதிலாக பயிற்சியாளர் வருவது மரபை மீறும் செயல் கிடையாது என்று பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்து பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா பற்றி ரவி சாஸ்திரி கூறும் பொழுது “ரோகித் சர்மா தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தால் அது குறித்து நான் ஆச்சரியமடைய மாட்டேன். ஏனென்றால் அவர் ஒன்றும் இளமையாக இல்லை. மேலும் இளம் வீரர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். கில் அவருடைய இடத்திற்கு சரியானவராக இருக்கிறார். 40 வயதில் இந்திய அணியின் பெஞ்சில் இருந்து அவர் என்ன செய்யப் போகிறார்?”
இதையும் படிங்க : இந்திய அணியில் மாற்றம் ஆரம்பிச்சாச்சு.. டிரெஸ்ஸிங் ரூமில் இவர்களுக்கு மட்டுமே இடம் – கம்பீர் பேச்சு
“இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தால் அல்லது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று இருந்தால் நடக்கும் விஷயங்கள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். தற்பொழுது ரோகித் சர்மா ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம். மேலும் அவர் விளையாடினால் சரியான முறையில் விளையாடி ஓய்வு பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.