நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இருவரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
நேற்று பாகிஸ்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் 177 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆப்கான் பந்துவீச்சில் ஓமர்சாய் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
2022 ஆம் ஆண்டு ஜோஸ் பட்லர் தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதற்கு அடுத்து 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி தொடர்களிலும் இங்கிலாந்து அணி தனது பெயருக்கு ஏற்ற வகையில் விளையாடவில்லை.
மேலும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் அணி அமைப்பு அணுகுமுறை மிகவும் அதிரடியான ஒன்றாக இருப்பது இந்த தோல்விகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சில புதிய வீரர்கள் மற்றும் புதிய பயிற்சியாளர் உடன் வந்த இங்கிலாந்து மீண்டும் பழைய முறையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியிருப்பது விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.
இதுகுறித்து பேசி உள்ள ரவி சாஸ்திரி கூறும் பொழுது “ஆப்கானிஸ்தான் நீங்கள் ராக் செய்து விட்டீர்கள். இங்கிலாந்து இந்திய துணை கண்டத்தில் விளையாடும் பொழுது எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல் விளையாடுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இங்கு வருகை தரும் அணியாக உங்களை அங்கீகரிக்க மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க :கிரிக்கெட் உலகில் யாரும் செய்யாத சாதனை.. ஆப்கான் ஓமர்சாய் எழுதிய புது வரலாறு.. 5 வீரராக இன்னொரு ரெக்கார்ட்
இதைத்தொடர்ந்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” ஆப்கானிஸ்தான் புத்திசாலித்தனமாக விளையாடியது. அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். இங்கிலாந்து அணியின் இந்த தோல்வி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சுமாராக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மிகக்குறிப்பாக இப்படியான சூழ்நிலையில் அவர்கள் தோல்வி அடைந்தது எனக்கு ஆச்சரியமாக இல்லை” என்று கூறி இருக்கிறார்.