தற்போது இந்திய அணியில் பலரும் நட்சத்திரமாக விராட் கோலியின் இடத்தை நிரப்பக்கூடிய வீரராக யார் இருக்கிறார்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பேச்சாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இந்திய அணியில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள். எனவே புதிய வலிமையான இந்திய அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் தற்போது இருக்கிறது.
இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட திருப்பம்
இந்த நிலையில் இளம் வீரர் கில் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி சிறப்பான முறையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தங்களை நிரூபித்தது. குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் மிகச் சிறப்பாக அமைந்தது. ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
மேலும் பேட்டிங் வரிசையில் விராட் கோலி விளையாடி வந்த நான்காவது இடத்தில் களம் இறங்கிய கில் 5 போட்டிகளில் நான்கு சதங்கள் உடன் 700க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார். இதற்கடுத்து கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார்கள். ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் 400கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார்கள்.
வளரும் நட்சத்திரம் யார்?
இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “சந்தேகமே கிடையாது அந்த வளரும் நட்சத்திரம் கில்தான். அவர் இன்னும் நீண்ட காலம் இந்திய அணிக்கு விளையாட போகிறார். ஏனென்றால் இங்கிலாந்தில் எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று நாம் பார்த்தோம். மேலும் தற்போது அவருக்கு 25 வயதுதான் ஆகிறது என்று நினைக்கிறேன். எனவே அவர் இன்னும் பெரிய அளவில் வரப்போகிறார்”
இதையும் படிங்க : கில்லுக்கு அடிக்கும் திடீர் அதிர்ஷ்டம்.. பரிதாபமாக சிக்கிய 2 இந்திய வீரர்கள்.. அகர்கர் புதிய திட்டம் – வெளியான தகவல்கள்
“கில் இனி இங்கேயே இருக்கப் போகிறார். அவர் மிகவும் கம்போஸ் ஆகவும் அதே சமயத்தில் மிகவும் தலைமைப் பண்புடனும் தந்திரமாகவும் இருக்கிறார். அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும் பொழுது சரளமாக நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்யக்கூடிய திறமையுடன் இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடியும்” என பாராட்டி இருக்கிறார்.






