இந்தியாவை சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் விளையாடி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டி20 உலக சாம்பியன் ஆக வந்த முதல் போட்டியிலேயே சிறிய அணியிடம் தோல்வி அடைந்தது விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் ரவி பிஸ்னாய் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய வைத்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஜிம்பாபே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ரவி பிஸ்னாய் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. கில் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி 29 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து, 12 வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வி குறித்து ரவி பிஸ்னாய் கூறும் பொழுது “புதிய வீரர்களுக்கான நேரம் இது. மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த அணியை முன்னோக்கி கொண்டு செல்வது எங்களுடைய பொறுப்பு. கில்லின் கேப்டன்சி மிக சிறப்பாக இருக்கிறது. அவரது பந்துவீச்சு மாற்றங்கள் சிறப்பாக இருக்கின்றன. இது நல்ல கேப்டன்சியின் அடையாளம்.
நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். நாங்கள் வலுவாக மீண்டு வரவேண்டும். இரண்டாவது போட்டிக்கு நாங்கள் ஞாயிற்றுக்கிழமை புத்துணர்ச்சியுடன் திரும்பி வரவேண்டும். நாங்கள் சரியாக பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் சரிந்தோம். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம். ஒரு பார்ட்னர்ஷிப் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். எங்களால் அதை செய்ய முடியாமல் போகவே, அது போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.
இதையும் படிங்க : 13 வருஷத்துக்கு முன்னாடி.. ரோட்ல நான் பண்ண சம்பவம்.. எனக்கு இப்போ திருப்பி நடக்குது- ஹர்திக் பாண்டியா பேட்டி
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக இருந்தது. அவர்கள் எங்களுடைய பார்ட்னர்ஷிப்பை வளர விடவில்லை. ஒவ்வொரு போட்டியில் இருந்தும் நாம் எதையாவது கற்றுக் கொள்ளலாம். கற்றுக்கொண்டு சிறப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






