இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றதற்கு பிறகு 17 வருடங்கள் கழித்து மீண்டும் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக டி20 கோப்பை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய தூண்களில் ஒருவராக விளங்கியவர் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா.
இவரது ஆல் ரவுண்டர் பங்களிப்பு ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு பெரிதாக கை கொடுத்தது. பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் முக்கியமான தருணங்களில் பெரிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இறுதிப் போட்டியில் இவர் எடுத்த கிளாஸன் மற்றும் டேவிட் மில்லர் விக்கெட்டுகள் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது குறித்து நினைவு கூறும்போது, இந்த விஷயங்கள் குறித்தும் நிச்சயமாக பேசப்படும்.
அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக எந்த மும்பை மக்களிடம் விமர்சனத்தை சந்தித்தாரோ, அதே மக்களிடம் தற்போது மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று இருக்கிறார். சமீபத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் இந்தியா வந்தடைந்த போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக பாண்டியாவுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தார்கள்.
இந்த வரவேற்பு குறித்து பேசிய துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா “நான் இப்போது சாலையில் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணி 2011ஆம் ஆண்டு ஒரு நாள் உலகை கோப்பையை வென்ற போது நானும் இதே போல இந்திய அணி வந்ததை மிக மகிழ்ச்சியாக கொண்டாடினேன். இதே போல ஆரவாரம் செய்தேன். இப்போது அதே 13 ஆண்டுகள் கழித்து எனக்கு அது நடக்கும் பொழுது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மும்பையில் தொடங்கிய எனது வெற்றி கொண்டாட்டம், அதே உலக கோப்பை தற்போது இந்தியாவிற்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது பல பேரின் இதயங்களில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் வெளிப்படுத்தி இருக்கிறது. இதைவிட பெரிய ஆசீர்வாதம் அல்லது இன்பம் என வேறு எதுவும் இருக்க முடியாது.நாட்டுக்காக விளையாடுவது என்பது எனக்கு எப்போதுமே ஒரு கனவு. இந்த நிகழ்ச்சிகள் என் வாழ்நாள் முழுவதும் நான் மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைக்கும் நிகழ்வுகளாக எப்போதுமே இருக்கும். அந்த அளவிற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன்.
இதையும் படிங்க:2 டி20 உலககோப்பை வெற்றி.. ஆனால் ஜெர்சியில் ஒரே ஒரு நட்சத்திரம்.. வெளிவந்த உண்மை காரணம்
மும்பை மக்கள் எப்போதுமே வரவேற்பு கொடுப்பதில் ஏமாற்ற மாட்டார்கள். இந்த வெற்றிக்காகத்தான் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இதே போன்ற சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது போன்ற கொண்டாட்டங்கள் முடிந்து விடாமல் இன்னும் தொடர வேண்டும் என்பதை எனது விருப்பம். அதற்காக நாங்கள் இன்னும் பாடுபடுவோம்” என்று கூறியிருக்கிறார்.






