ரஞ்சி டிராபி.. 14 ரன் 4 விக்கெட்.. முகமது ஷமியின் தம்பி அசத்தல்.. உண்மை ஆனது அண்ணனின் வார்த்தை

0
5320

இந்தியாவில் தற்போது ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் பி பிரிவில் கான்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் உத்தரப் பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப் பிரதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 20.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

உத்தரப்பிரதேச அணியின் கேப்டன் நித்திஷ் ராணா 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். பெங்கால் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி உத்தரப்பிரதேச அணியை குறைந்த ரன்களுக்குள் மடக்கினர். பெங்கால் அணித் தரப்பில் இஷான் போரேல் இரண்டு விக்கட்டுகளையும், சிந்து ஜெயிஸ்வல் மூன்று விக்கட்டுகளையும், முகமது கைப் ஆறு ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- Advertisement -

4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது கைப் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் முகமது சமியின் சகோதரன் ஆவார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது கைப் தற்போது பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லிஸ்ட் ஏ போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் களம் இறங்கினார்.

இவர் இதுவரை லிஸ்ட் ஏ போட்டியில் ஒன்பது இன்னிங்ஸ்களில் விளையாடி 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒரு முதல் தர போட்டியில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
2023ஆம் ஆண்டு கோவா அணிக்கு எதிரான லிஸ்ட் ஏ போட்டியில் 39 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை அள்ளினார். அதற்குப் பின் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட்டையும், ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆந்திர அணிக்கு எதிரான முதல் தர போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.தற்போது ரஞ்சி டிராபியில் தனது சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் அணி வீரர் முகமது சமி தனது சகோதரன் செயல்பாடு குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறியதாவது
“நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடுகிறாய். வாழ்த்துக்கள். இது ஒருசிறப்பான சாதனை. உனக்கு சிறப்பான எதிர்காலம் அமைய நான் வாழ்த்துகிறேன். நீ உன்னுடைய 100 சதவீத உழைப்பைத் தொடர்ச்சியாக வழங்கி அணி வெற்றி பெற உதவ வேண்டும்” என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த அண்ணனின் வார்த்தை உண்மையாகி இருக்கிறது.

தற்போது பெங்கால் அணி தனது முதல் இன்னிங்ஸில் 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.