கடந்த ஐபிஎல் சீசன் தொடர் தோல்விகளுக்கு பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை நொறுக்கி பழி தீர்த்தது ராஜஸ்தான்!

0
322
Ipl2023

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட போட்டி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது!

முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த முறை குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சகா மற்றும் மூன்றாவது ஆட்டக்காரர் சாய் சுதர்சன் இருவரையும் 4, 20 ரன்களில் ராஜஸ்தான் அணி வெளியேற்றியது. பவர் பிளேவில் இரண்டு விக்கட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே குஜராத் எடுத்தது.

- Advertisement -

ஆனால் இதற்குப் பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்ட ஸ்கோர் உயர்ந்தது. அவர் 28 ரண்களில் வெளியேற, கில் 45 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய அபினவ் மனோகர் 13 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரஷித் கான் 1, ராகுல் திவாட்டியா 1* என ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. சந்திப் ஷர்மா நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 10.5 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை 55 ரன்கள் ராஜஸ்தான் இழந்தது. இதனால் பெரிய நெருக்கடி நிலை நிலவியது.

இந்தச் சூழ்நிலையில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ரஷீத் கானின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அந்த ஓவரில் 20 ரன்கள் கொண்டு வந்தார். அங்கிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் வேகம் எகிற தொடங்கியது.

- Advertisement -

சிறப்பான அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட சஞ்சு சாம்சன் இறுதியாக 32 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து பொறுப்பு சிம்ரன் ஹெட்மயர் மேல் வந்தது. அவர் விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்டார்.

இவருக்கு துணையாக இளம் வீரர் துருவ் ஜுரல் 10 பந்தில் 17 ரன்களும், 19ஆவது ஓவருக்கு வந்த அஸ்வின் மூன்று பந்தில் 10 ரன்களும் எடுக்க கடைசி ஓவரில் ஏழு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூர் அகமது வீச முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த ஹெட்மையர், இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டு அணியை வெல்ல வைத்தார். இந்த போட்டியில் முகமது சமி நான்கு ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுகளை 25 ரன்களுக்கு வீழ்த்தினார்.

ஒருகட்டத்தில் தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தின் மூலம் மீண்டு வந்து வெற்றி பெற்று தனது நான்காவது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!