ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியின் 36-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் ராஜஸ்தான் அணிக்கு அறிமுகவீரராக களம் இறங்கிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி ஐபிஎல் தொடரில் சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சாதனை
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சி அறிமுக வீரராக களம் இறங்கினார். இந்த சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் சிறப்பாக விளையாடி 45 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு தற்போது ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தொடக்க வரிசையில் களம் இறங்கிய 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி ஐபிஎல் தொடரில் சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார். அதாவது இவருக்கு 14 வயது 23 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் தனது முதல் போட்டியை விளையாடும் இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்திருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 12வது வயதிலேயே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தனது முதல் பந்தை சர்துல் தாக்கூருக்கு எதிராக எதிர்கொண்டார்.
முதல் பந்திலேயே சிக்ஸ்
தனது முதல் பந்தையே சிக்ஸர் அடித்து தனது ஐபிஎல் அறிமுகத்தை வெற்றிகரமாக தொடங்கிய 14 வயது இளம் வீரர் தற்போது அனைவரது கவனத்தையும் பெற்று இருக்கிறார். மிகக்குறைந்த வயதில் ஐபிஎல் போட்டி அறிமுகம் என்ற எந்தவிதமான சிறு பயமும் இல்லாமல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 20 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 170 ஸ்ட்ரைக் ரேட்டில் 34 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:வெறும் 3 ரன்னில் தவறவிட்ட சதம்.. எனக்கு வாய்ப்பு இருந்தும் ராகுலிடம் அப்போது இதைத்தான் கூறினேன் – ஜாஸ் பட்லர் ஆச்சரியம்
தனது முதல் போட்டியே அற்புதமாக அமைந்திருக்கும் நிலையில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சற்று முன்பு வரை 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடி வரும் மற்றொரு தொடக்க வீரர் ஜெய்சுவால் 33 பந்துகளை எதிர்கொண்டு 52 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார்.






