“ராஜஸ்தான் ராயல்ஸ் நெட் பவுலர்களை நன்றாக நடத்தவில்லை சரியான சம்பளம் கொடுக்கவில்லை” – திடுக் தகவலை வெளியிட்ட பத்திரிக்கையாளர்!

0
203
RR

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மற்ற அணிகள் ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்க ஒரு அணி மட்டும் ஒரு புதிய பாதையில் ஏலத்தை அணுகியது. அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஒரு நல்ல அணிக்கு தேவைப்படும் 11 வீரர்களுக்கு அதிகப்படியான தொகையை செலவழித்து ஒரு வலிமையான பிளெயிங் லெவனை உருவாக்குவது, மீதமுள்ள தொகையில் தேவைப்படும் சிறிய வீரர்களை வாங்கிக் கொள்வது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் செயல்பட்டது!

- Advertisement -

இதன்படியே அவர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், சாகல், டிரண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, சிம்ரன் ஹெட்மையர், தேவ்தத் படிக்கல் என்று அணிக்குத் தேவையான முக்கியமான வீரர்களுக்கு மட்டும் செலவிட்டு, 11 வீரர்களைக் கொண்ட ஒரு வலிமையான பிளேயிங் லெவனை மட்டும் உருவாக்கிக் கொண்டார்கள்.

அவர்களின் இந்த திட்டத்திற்கு பலனாக கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக விளையாடி, ஐபிஎல் முதல் சீசனுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று, இறுதிப் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தைத் தவற விட்டார்கள்.

மேலும் இந்த வருடம் மினி ஏலத்தில் ஜேசன் ஹோல்டரை அணிக்குள் கொண்டு வந்தார்கள். மேலும் காயத்தால் பிரசித் கிருஷ்ணா கிடைக்காமல் போக சந்திப் சர்மாவை கொண்டு வந்தது மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. பேட்டிங்கில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் விஸ்வரூபம் எடுத்திருந்தார்.

- Advertisement -

இந்த காரணங்களால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறையும் மிகச் சிறப்பாக தொடரை துவங்கியது. முதல் பாதியில் அபார வெற்றிகள் பெற்று மிக வலிமையான நிலையில் தொடரில் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் யாரும் எதிர்பார்க்காதவாறு செயல்பட்டு பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் விக்ராந்த் குப்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களை சரியான முறையில் நடத்தாமலும் அவர்களுக்கான சரியான ஊதியத்தை கொடுக்காமல் சுரண்டியதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
” ராஜஸ்தான் ராயல்ஸ் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்படவில்லை. அவர்களுக்கு அகாடமி அறைகளே ஒதுக்கப்பட்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்களின் வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்களுக்கு 1.5 லட்சம் வழங்குகிறது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே வழங்கியிருக்கிறது!” என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை குறிப்பிட்டு அவர் கூறும் பொழுது அவர்கள் இந்த வருடத்தில் வலை பயிற்சி பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஒன்பது லட்சம் ரூபாய் செலவழித்து இருப்பதாகவும், அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் 3 லட்ச ரூபாய் மட்டுமே செலவழித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்!