இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து உணர்ச்சிப் பூர்வமாக பேசிய ராகுல் திரிப்பாத்தி

0
119
Rahul Tripathi

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்து மகாராஷ்ட்ரா மாநில அணிக்காக விளையாடி வரும் 30 வயதான ராகுல் திரிபாதி, தற்போது இந்திய பேட்டர்களில், சூர்யகுமார் யாதவ் போல மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு பேட்ஸ்மேனாக இருக்கிறார். கடந்த சில ஐ.பி.எல் சீசன்களாக இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களைத் தொடர்ந்து தன் புறம் பார்வையைத் திருப்புமாறு சிறப்பாக விளையாடி வருகிறார்.

முதன் முதலில் ஐ.பி.எல் தொடரில் 2017ஆம் ஆண்டு 10 இலட்சத்திற்கு புனே ரைசிங் ஜெயன்ட்ஸ் அணியில் வாங்கப்பட்டவர், அந்த ஆண்டு 14 போட்டிகளில் 391 ரன்களை குவித்துப் பிரமாதப்படுத்தினார். இதையடுத்து 2018-19ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக 3.40 கோடிக்கு வாங்கப்பட்டவரை, அந்த அணி இரண்டாண்டுகளோ கழட்டிவிட்டது. இதையடுத்து கொல்கத்தா அணி அவரை 2020-21 இரு ஆண்டுகளுக்கு 60 இலட்சத்திற்கு வாங்கியது. 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் 17 ஆட்டங்களில் 397 ரன்களை குவித்தார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் மெகா ஏலத்தில் ஹைதராபாத் அணியால் 8.50 கோடிக்கு வாங்கப்பட்ட இவரின் தாக்குதல் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் 413 ரன்களை குவித்தார். இதனால் தென்ஆப்பிரிக்க அணியோடு நடந்துவரும் டி20 போட்டி தொடருக்கு முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை.

இந்தச் சமயத்தில் இந்திய அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க, இந்த மாதம் இங்கிலாந்திற்குச் செல்கிறது. அதே நேரத்தில் அயர்லாந்து அணியுடன் ஜூன் 24, 26ஆம் தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதனால் ஒரு பெரிய அணியை இங்கிலாந்திற்கும், அயர்லாந்திற்கு இன்னொரு அணியையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்புகிறது. இந்த அணியில் தற்போது ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது!

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராகுல் திரிபாதி “இது மிகப்பெரிய வாய்ப்பு. என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. என்னை நம்பி தேர்வு செய்துள்ள தேர்வாளர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் சொல்லிக்கொள்கிறேன். இதற்காக நான் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இதற்கு கிடைத்த வெகுமதி இது. எனக்கு ஆடும் அணியிலும் இடம் கிடைத்தால், என்னால் முடிந்த சிறந்ததை அணிக்குத் தருவேன்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -