“ராகுல் இன்னும் இந்திய வீரர்தான்!” – இந்திய முன்னாள் வீரர்கள் மீது ஹர்பஜன் சிங் தாக்கு!

0
163
Harbhajan

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் தற்பொழுது விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது!

இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருப்பது போலவே, இந்திய அணியின் பக்கம் இரண்டாவது போட்டி வரை துணை கேப்டனாக இருந்து வந்த கே எல் ராகுல் சந்தித்திருக்கிறார்.

- Advertisement -

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. கே எல் ராகுல் பேட்டிங் ஃபார்ம் கடந்த இரண்டு வருடங்களாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிக மிக சுமாராகவே இருந்து வருகிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவரது செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அதே நிலைமை தொடர்கிறது. மேலும் டி20 ஒருநாள் போட்டியென எதிலும் அவர் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அவரது பேட்டிங் அணுகுமுறை இல்லை. ஆனாலும் அவரது தரத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி நிர்வாகம் ஆட வைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அவரது பேட்டிங் அணுகுமுறை குறித்தும் பேட்டிங் ஃபார்ம் குறித்தும் தொலைக்காட்சி விவாதங்களில் நிறைய இந்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்று அலசுகிறார்கள்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கேஎல் ராகுலுக்கு இந்திய அணியில் இடம் தருவதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் மிகப்பெரிய அநீதி என்று சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அவர் இப்படி கருத்து கூறுவது தனிப்பட்ட ஆதாயத்துக்கு என்று இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குத்தலாக பேச இணையத்தில் தற்பொழுது இது தீயாக எரிந்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங் ” கே எல் ராகுல் விளையாட வேண்டுமா அல்லது நீக்கப்பட வேண்டுமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் தீப்பிடித்து உள்ளது. மேலும் எங்களது பல முன்னாள் வீரர்கள் விவாதங்களில் ஈடுபட்டு உள்ளார்கள். உண்மையில் விளையாட்டை ஆர்வமுடன் பின்பற்றுபவர்களை தவிர, மற்றவர்கள் விவாதிக்கப்படுவதில் உள்ள சூடான கேலியை மட்டுமே ரசிக்கிறார்கள்!” என்று இந்திய முன்னாள் வீரர்களுக்கு குட்டு வைத்துள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசி உள்ள அவர்
” கே எல் ராகுல் எப்படி விளையாடினாலும் அவர் இன்னும் ஒரு இந்திய வீரர். அவர் எங்களுடைய வீரர் என்பதை புரிந்து கொள்ளுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதை நாம் மதிக்க வேண்டும். அவருடைய ஆட்டத்தின் சில அம்சங்களைப் பற்றி அவர் சிந்திக்க அவருக்கு சிறிது நேரம் வேண்டும். இத்தனைக்கும் இடையே அவரால் எப்படி இதையெல்லாம் ஆழ்ந்து புரிந்துகொள்ள முடியும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்!” என்று கூறியுள்ளார்!

ஹர்பஜன்சிங் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஆகாஷ் சோப்ரா இடையே நடைபெற்று வரும் சமூக வலைதள விவாதத்தை பற்றி இது இந்திய கிரிக்கெட்டின் மேம்பாட்டை விரும்பாதவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக மாறி உள்ளது என்று கருதுகிறார்!