இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராக திகழ்ந்த ராகுல் டிராவிட் கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை வென்ற பிறகு தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன்களில் தான் மிகவும் ரசித்த ஒரு கேப்டன் இவர் என இந்திய வீரர் குறித்து டிராவிட் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்ச்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்தது. அத்தோடு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட் இருந்து ஓய்வும் பெற்றனர்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ராகுல் டிராவிட், இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்புக்கு தான் ஒரு ரசிகன் என்று கூறி இருக்கிறார். மேலும் அணியின் வீரர்களை பாதுகாப்பதில் ரோகித் சர்மா மிகவும் சிறப்பான ஒரு கேப்டன் என சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “அவர் அணியை பற்றி எப்போதும் அக்கறை கொண்டவர் என்று நான் உணர்ந்தேன். முதல் நாளிலிருந்து அவர் அணியை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் அவருக்கு எது முக்கியம் என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையேயான உறவில் இது மிகவும் முக்கியம் என்று உணர்கிறேன். ஒரு கேப்டனின் அணியாக எப்போதும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் இருந்திருக்கிறேன். ஒரு கேப்டன் அணியை அவர் விரும்பும் திசையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இதையும் படிங்க:ஸ்ரேயாஸ் ஐயரை விட அந்த பையன்தான் அதிகமா வருந்தனும்.. நாம யாருமே அவருக்கு ஆதரவு தரல – இந்திய முன்னாள் வீரர்
நிச்சயமாக ஒரு கேப்டனுக்கு தெளிவு பெறவும் என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளவும் உதவுவதில் நீங்கள் அவருக்கு உதவ வேண்டும். அவரது கேப்டன் பண்புக்கு பெரிய ரசிகன் நான். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் அவர் மிகவும் அமைதியாக இருந்தார். அவர் அணியின் சூழ்நிலையையும், அமைதியையும் நன்றாக பராமரித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நபராக அவரை அறிந்து கொள்வதும் அவரோடு அரட்டை அடிப்பதும் மிகவும் பிடித்திருந்தது. அவரை சந்தித்து இரவு உணவு சாப்பிடுவது மிக எளிதாக இருந்தது நிறைய விஷயங்கள் இயல்பாக பேச முடிந்தது” என்று டிராவிட் பேசி இருக்கிறார்.






