தற்போது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி நடைபெற்று வருகிறது. ரஞ்சி டிராபியின் இந்த வருட சீசனின் இறுதிப் போட்டியில் இன்று மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதி வருகின்றன.
மும்பை அணி அரைஇறுதியில் தமிழக அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஒன்பதாவது வீரராக வந்து சதம் அடித்து மும்பை இறுதிப் போட்டிக்கு வர முக்கிய காரணமாக சர்துல் தாக்கூர் இருந்தார்.
இந்த போட்டி முடிவுக்கு பின்னால் பேசியிருந்த சர்துல் தாக்கூர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், ஒரு ரஞ்சி போட்டிக்கு இடையில் மூன்று நாட்கள் மட்டுமே ஓய்வு கொடுக்கப்படுவதாகவும், இறுதிப் போட்டிக்கு வரும் ஒரு அணி பத்து போட்டிகளை மூன்று நாட்கள் இடைவெளியில் விளையாட வேண்டும் என்றும், இது தொடர்ந்தால் இரண்டு வருடத்தில் இந்தியாவில் பல இளம் வீரர்கள் காயத்தில் இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.
முன்பு இந்திய உள்நாட்டு போட்டிகளில் 4 நாட்களும் 5 நாட்களும் என இடைவெளி கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. மேலும் நாட் அவுட் சுற்றுகளுக்கு ஒரு வாரமும் இடைவெளி இருந்திருக்கிறது. டெஸ்ட் போட்டி என்கின்ற காரணத்தினால் இவ்வளவு குறுகிய இடைவெளியில் வீரர்கள் விளையாடுவது மிகவும் கடினமான ஒரு காரியம். இதன் காரணமாக வீரர்கள் அதிக அளவில் காயமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “நான் சர்துல் தாக்கூர் பேசியிருந்த விஷயத்தை கேட்டேன், மேலும் அணிக்குள் வந்திருந்த சில இளம் வீரர்களும் உள்நாட்டு போட்டி அட்டவணைகள் எவ்வளவு கடினமாக இருக்கிறது என்று என்னிடம் கூறினார்கள்.
வீரர்கள் அரைகுறையாக சென்று, தொடர்ந்து போட்டிகளில் தங்கள் உடலை கொடுத்து விளையாடுவதால், நாம் போட்டிகளின் அட்டவணையை எப்படி அமைக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்க வேண்டும். இதை எப்படி நிர்வகிக்க முடியும் என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் உள்நாட்டு சீசன் மிகவும் நீளமானது. எனவே இது மிகவும் கடினமானது.
இதையும் படிங்க : “முகமது சமி ஆண்டர்சனை பார்த்து இது கத்துக்கனும்.. அவரால முடியும்” – கிளன் மெக்ராத் கருத்து
ரஞ்சி சீசன் மிக நீளமானது மேலும் இதில் துலிப் டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகியவற்றை சேர்த்தால் மிக நீண்டதாக மாறிவிடும். ஐபிஎல் முடிந்த ஒரு மாதத்தில் துலிப் ட்ராபி தொடங்கியது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இடம்பெறுவதற்காக விளையாடும் சிறந்த வீரர்கள் எல்லோரும் தொடர்ந்து விளையாட வேண்டியதாக இருக்கும். அவர்களுக்கு இது மிக கடினமானதாக மாறிவிடும்” எனக்கூறி இருக்கிறார்