இனி வீரர்களின் பணிச்சுமை எல்லாம் பார்க்க முடியாது – ராகுல் டிராவிட் அதிரடி!

0
182
Rahul Dravid

கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளோடு

- Advertisement -

படுதோல்வியை சந்தித்து முதல் சுற்றோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்தத் தோல்வி தற்போது இந்திய கிரிக்கெட்டில் உருவாக்கியிருக்கும் மாற்றங்கள் என்று பார்த்தால் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அந்த அளவிற்கு கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் ஏற்பட்ட இரு தோல்விகள் இந்திய அணியின் கிரிக்கெட் மீது பெரிய நெருக்கடியை உருவாக்கி இருந்தது.

இதற்கு பிறகு ஆட்கள் மாறினார்கள் காட்சிகளும் மாற ஆரம்பித்தது. இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் வந்தார்கள். இந்த கூட்டணியின் செயல்பாடு அந்தந்த தொடர்களுக்கு மட்டும் இல்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மிக சிறப்பாகவே அமைந்து வந்திருக்கிறது. அதே சமயத்தில் ஆடும் போட்டிகளுக்கான முக்கியத்துவத்தையும் தந்தே வந்திருக்கிறார்கள்.

ரோகித் சர்மா ராகுல் டிராவிட் இந்த கூட்டணி புதிய வீரர்களுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு அளித்ததோடு, அணியிலிருந்து வெளியிலிருந்த அஸ்வின் தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களுக்கும் திரும்பவும் வாய்ப்பு அளித்தது. இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே அணியில் வாய்ப்பு பெற்று இருந்த சில இளம் வீரர்களுக்கு, முதலில் தொடர் வாய்ப்புகள் தரப்பட்டது. உதாரணமாக ஸ்ரேயாஸ், ஆவேஸ் இவர்களைக் கூறலாம். தற்போது இந்த கூட்டணியின் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி ஒரு புதிய செயல் முறையில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது.

- Advertisement -

இதுபற்றி எல்லாம் தற்போது மனம்திறந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார். ராகுல் டிராவிட் இது பற்றி கூறும் பொழுது ” அடுத்த மூன்று தொடர்களுக்கு வீரர்களின் எந்த பணிச்சுமை பற்றியும் பார்க்கப் போவதில்லை. கட்டாயம் ஓய்வு அளித்தே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அது பரிசீலிக்கப்படும். உதாரணமாக ஜடேஜா போல. இனி வரும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய இருக்கிறோம். அதன் பிறகு எங்களுக்கு பணிச்சுமையை நிர்வகிக்க நேரம் கிடைக்கும். டி20 உலகக் கோப்பை வரை நாங்கள் சிறந்த ஒரு அணியைக் கொண்டு போட்டிகளை விளையாட இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் ” இந்த நிலைமைகளில் இதைச் செய்து விளையாடுவதில் நாங்கள் முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடும் ஒரு 15 பேர் கொண்ட அணி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லா சூழ்நிலையிலும் ஒரு சிறப்பான லெவனை தயார் செய்ய முடியும்” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நாங்கள் சூழ்நிலைகளோடும் நிபந்தனைகளோடும் மற்றும் எதிரணியோடும் கிரிக்கெட் விளையாடுகிறோம். இதை நாங்கள் தெளிவாக உணர்கிறோம். முன்கூட்டியே விளையாடும் அணி என்று நாங்கள் எதையும் தேர்வு செய்வதில்லை. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் சூழ்நிலைக்கும் நிபந்தனைக்கு உட்பட்டு நாங்கள் அணியை தேர்வு செய்கிறோம் ” என்று கூறி மேலும் தொடர்ந்தார்…

தொடர்ந்து அவர் பேசும்பொழுது ” ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் தேவைப்பட்டார். ஆனால் இந்த ஆட்டத்தில் அப்படி இல்லை. எப்போதும் சொல்வதுதான் யாரையும் அணியில் இருந்து விலக்கி வைப்பது கடினமான ஒரு காரியம். நாங்கள் இப்போது தினேஷ் கார்த்திக்கை விலக்கி வைக்கிறோம் ரிஷப் பண்ட் உடன் விளையாடுகிறோம். இதற்கு நிறையப் பேர் வருத்தப்பட செய்யலாம்” என்றும் கூறினார்!