குயிண்டன் டிகாக் ரேர் ரெக்கார்ட்.. விராட் கோலியை முந்தினார்.. 10 ஓவர் 134 ரன்.. தென் ஆப்பிரிக்கா மீண்டும் அதிரடி!

0
747
Quinton

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி வெயிலின் காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. மும்பை மைதானம் கடலை ஒட்டி இருப்பதால் இந்த மாதங்களில் கடுமையான வெயில் அங்கு நிலவி வருகிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா இந்த ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. அவருடைய இடத்தில் வந்த ரீசா ஹென்றிக்ஸ் இந்த முறை 12 ரன்களிலும், அடுத்து வந்த வாண்டர் டேசன் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டிகாக் மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரம் இருவரும் இணைந்து சரிவிலிருந்து அணியை மீட்டெடுக்க ஆரம்பித்ததோடு அங்கங்கு அதிரடியாக பவுண்டரிகளும் விளையாடினார்கள்.

அரைசதம் கடந்த எய்டன் மார்க்ரம் 69 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதற்கு அடுத்து அபாயகரமான பேட்ஸ்மேன் ஹென்றி கிளாசன் களத்திற்கு வந்தார்.

- Advertisement -

இன்னொரு முனையில் அதிரடியில் மிரட்டிய குயிண்டன் டிகாக் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது மூன்றாவது சதத்தை அடித்து அசத்தினார். அதற்கடுத்தும் அவருடைய அதிரடி நிற்கவில்லை. தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய அவர் 140 பந்துகளில் 15 பவுண்டரிகள் ஏழு சிக்ஸர்களுடன் 174 ரன்கள் குவித்தார். இந்த உலகக் கோப்பையில் இதுவே தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இதற்கு அடுத்து இன்னொரு முனையில் அதிரடியில் ஈடுபட்ட ஹென்றி கிளாசன் 49 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 90 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். கடைசியில் வந்த டேவிட் மில்லர் 15 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 34 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் தரப்பில் ஹசன் மக்மத் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். கடைசி 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 134 ரன்கள் குவித்தது.

குயிண்டன் டிகாக் இந்த சதத்தின் மூலமாக இந்தியாவில் நான்கு ஒருநாள் கிரிக்கெட் சதங்கள் அடித்து இருக்கிறார். இதில் அரிய விஷயம் என்னவென்றால் அவர் நான்கு முறை அரை சதத்தை தாண்டிய போதும் அதை சதமாக மாற்றி இருக்கிறார். அரைசதம் அடித்து அவர் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டம் இழந்தது கிடையாது.

மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் சதங்கள் அடித்த ஒரே வீரராக அவர் இருக்கிறார். மேலும் 17 பேர் ஒரு சதம் மட்டுமே அடித்திருக்கிறார்கள்.

விக்கெட் கீப்பராக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 ரன்களுக்கு மேல் மூன்று முறை அடித்த ஒரே வீரராக மாறி இருக்கிறார். மேலும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 400 ரன்களை கடந்து விராட் கோலியை முந்தி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக வந்திருக்கிறார்.