ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஜோஸ் இங்லீஷ் கடைசி நேரத்தில் நடந்து கொண்டது சரியானது கிடையாது என அந்த அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் ஜோஸ் இங்லீஷை கழட்டிவிட்டது. அந்த அணிக்கு சிறப்பான முறையில் பங்களிப்பு செய்த அவரை வெளியில் விட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இது மிக தவறான முடிவு என பலரும் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மீது விமர்சனங்களை வைத்தார்கள்.
அதற்குப் பிறகு ரிக்கி பாண்டிங் வெளியில் வந்து ஜோஸ் இங்லீஷ் ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்ய இருப்பதால் அவர் பல போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்கின்ற காரணத்தினால் அவரை விடுவித்தோம் என்று கூறினார். இருந்த போதிலும் இது தவறான முடிவாகவே பார்க்கப்பட்டது.
இதுகுறித்து நெஸ் வாடியா கூறும்பொழுது “நாங்கள் ஜோஸ் இங்லீஷை வெளியில் விடவில்லை. துரதிஷ்டவசமாக அவர்தான் எங்களிடம் கடைசி நேரத்தில் அதை தெரிவித்தார். இது உண்மையில் நியாயம் கிடையாது. எல்லோருக்குமே வீரர்களை தக்க வைக்கும் கடைசி தேதி நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் அவர் கடைசி நாளில் 45 நிமிடத்திற்கு முன்பாக, தனக்குத் திருமணம் நடக்க இருப்பதாகவும், அதனால் இரண்டு வாரங்கள் மட்டுமே தான் விளையாட முடியும் என்றும் கூறினார்”
“இது குறித்து அவர் எங்களிடம் முன்பே சொல்லி இருக்க வேண்டும் என நாங்கள் அவரிடம் சொன்னோம். ஒரு தொழில் முறை வீரராக அவர் செய்தது சரியானது கிடையாது. யாராக இருந்தாலும் அவரை ஒரு அணி தக்க வைத்திருக்கும் பொழுது கடைசி நேரத்தில் அழைத்து நான் வர முடியாது என்று சொல்ல முடியாது”
இதையும் படிங்க : SMAT பைனல்.. ஜார்கண்ட் டி20 உலக சாதனை.. இஷான் கிஷான் அதிரடி சதம்.. ஹரியானா பரிதாபம்
“ஆனாலும் நான் அவருக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சிறந்த வீரர். ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பாக செயல்படுவார். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறாரா இல்லையா? என்று பார்ப்போம். ஒரு சக மனிதராக அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் ஆனால் அவர் செய்தது தொழில்முறையானது கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.