நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலமாக அவர் தனது பேட்டிங் பார்முக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று பரவிய செய்திக்கு தற்போது அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போதைய பேட்டிங் பார்ம் சற்று பின்னடைவை சந்தித்திருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்த முயற்சிப்பதாகவும் ரோகித் சர்மாவை ஓய்வு பெற வலியுறுத்துவதாகவும் செய்திகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்போல பரவியது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியே அவரது கடைசி ஒரு நாள் போட்டியாக இருக்கும் என்று கருத்துக்கள் பரவி வந்தது.
இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா இது குறித்து அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் குறிப்பிடும் போது “நான் அறிமுகமான காலத்தில் இருந்தே இத்தகைய சலசலப்புகள் இருந்து வருகின்றன. நான் விளையாடும் காலம் வரை அவை இருக்கவே செய்யும். களத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதுதான் முக்கியம். அணிக்காக நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எப்போது எனது கவனமாக உள்ளது. எனவே இந்த சலசலப்புகள் இருக்கட்டும் அவை இல்லை என்றால் சுவாரஸ்யம் இருக்காது” என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.