நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கம் நன்றாக அமைந்தாலும் அதற்குப் பிறகு வந்த வீரர்கள் பொறுப்பின்றி விளையாடிய காரணத்தால் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 387 ரன்கள் குவித்தது
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 பந்துகளில் 138 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரராகவும் மாறினார்.
இது குறித்து இந்திய கேப்டன் கூறும் போது “நாங்கள் தோல்வியடைந்த விதம் உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் ரோஹித் பாய் ஆட்டத்தை கையாண்ட விதம் உண்மையிலேயே பெருமையாக உள்ளது. பெரும்பாலான நேரம் அவர் எதிர்முனையில் பேட் செய்து கொண்டிருந்ததை நான் பார்த்து ரசித்தேன். பெரிய இலக்கை துரத்தி பிடிக்கும் போது விக்கெட் கையில் வேண்டும் என்பதைப் பற்றிய நாங்கள் அதிக நேரம் பேசினோம். இருப்பினும் பவர் பிளேவை தாக்கி விளையாடலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து உரையாடினோம். புதிய பந்தை தாக்கி விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனாலும் அவர் 70 ரன்னை கடந்தும் பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்த விதம் பார்ப்பதற்கு விருந்தாக அமைந்தது” என்று பேசி இருக்கிறார்.