18-வது ஐபிஎல் சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெங்களூரு பஞ்சாப் மோதல்
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மழையின் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. 20 ஓவர்களில் இருந்து 14 போவார்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. அதில் முன்னணி வீரர்களான விராட் கோலி 1 ரன், பில் சால்ட் 4 ரன்னில் வெளியேற கேப்டன் பட்டிதார் 18 பந்துகளில் 23 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 50 ரன்கள் குவித்தார். மழை பெய்த காரணத்தால் ஆடுகளம் பவுன்ஸ் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் இதனை பஞ்சாப் வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
5 விக்கெட்டில் பஞ்சாப் வெற்றி
அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரியன்ஸ் ஆர்யா 11 பந்துகளில் 16 ரன் எடுத்திருந்த நிலையில் ஹேசில் வுட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் பிரப் சிம்ரன் சிங் 13 ரன்னில் நடையை கட்டினார். அதற்குப் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜாஸ் இங்கிலீஷ் இருவரும் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேற, இக்கட்டான நிலைமையில் சிக்கி இருந்த பஞ்சாப் அணியை இளம் வீரர் நெகல் வதேரா மீட்டெடுத்தார்.
இதையும் படிங்க:அதிவேக 1000 ரன்கள்.. வெறும் 1 இன்னிங்ஸ்.. சச்சினின் ரெக்கார்டை முறியடித்து.. சாதனை படைத்த ஆர்சிபி கேப்டன்
19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 33 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து பஞ்சாப் அணியின் வெற்றி உறுதி செய்தார். 12வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து ஸ்டாய்னிஸ் போட்டியை முடிக்க பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பெங்களூர் அணிக்கு தொடர்ந்து மூன்றாவது தோல்வியாகும். ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு நுழைந்துள்ளது.






