நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு காரணம் கேப்டன் ரகானேவின் தேர்வும் முக்கியமானதாக இருக்கிறது என புஜாரா வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரகானே தலைமையிலான கேகேஆர் அணி ஒன்பது போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு டிரா மற்றும் ஆறு போட்டிகளில் தோல்வி என ஏழு புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. வீரர்களை தக்க வைப்பதில் இருந்து ஏலம் வரையில் பல தவறுகளை செய்து கேகேஆர் அணி இந்த நிலைமையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்களை தக்க வைப்பதில் கேகேஆர் அணி நிர்வாகம் தங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைக்காமல் பெரிய தவறை செய்தது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் பஞ்சாப் அணிக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் குறைந்த விலைக்கு வெங்கடேஷ் ஐயரை தக்க வைக்க முடிந்திருந்த போதும், அவரை வெளியில் விட்டு 23 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதும் தவறாக முடிந்திருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு அனைத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்த வெளிநாட்டு வீரரான பில் சால்டை தக்க வைக்காததும் தவறாகி இருக்கிறது. மேலும் ரகானேவை கேப்டனாக கொண்டு வந்ததும் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடன் இந்திய அணியில் பல நேரங்களில் ஒன்றாக விளையாடி உள்ள ரகானே மற்றும் கேகேஆர் அணி நிர்வாகம் குறித்து இந்திய வீரர் புஜாரா வெளிப்படையான முறையில் தனது விமர்சனத்தை வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது “கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு அவர்கள் கேப்டன் யார் என்பதில் ஆரம்பம் முதலில் தெளிவு கிடையாது. சீசன் தொடங்கும்போது கூட ரகானேவா இல்லை வெங்கடேஷ் அய்யரா என்று தான் குழப்பமாக இருந்தது”
இதையும் படிங்க : பிசிசிஐ நல்லா கவனிங்க.. பும்ராவுக்கு வேற நடந்துட்டு இருக்கு.. ப்ளீஸ் இதை பண்ணுங்க – ரவி சாஸ்திரி பேட்டி
“ஒரு சீசன் துவங்குவதற்கு முன்னால் நிச்சயமற்ற நிலை இருந்தால், ஒரு கேப்டனாக உங்களிடம் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு தெளிவு இல்லாமல் இருந்தால், அது நிச்சயம் மொத்த அணியையுமே பாதிக்கும். தற்போது ரகானே கேப்டனாக இருப்பது அந்த அணியை பாதித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.