தற்போது பிசிசிஐ பும்ராவுக்கு எப்படி ஓய்வு கொடுக்கலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கியமான விஷயத்தை வெளியிட்டிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் காயத்தின் காரணமாக தாமதமாக வந்த பும்ரா சிறப்பாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடர் முடிந்ததும் 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி இங்கிலாந்து செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷேன் பாண்ட் எச்சரிக்கை
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்து லெஜன்ட் ஷேன் பாண்ட் பும்ராவுக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு வந்துவிடும் என்று எச்சரிக்கை செய்திருந்தார். மீண்டும் அவர் காயப்படாமல் இருப்பது மிகவும் முக்கியம் என்று அவர் கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு இதே போல ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட சென்ற பொழுது பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க முடியாத நிலையில் இந்திய அணி நிர்வாகம் இருந்தது. இதனால் அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நானாக இருந்தால் இதை செய்வேன்
இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” நானாக இருந்தால் பும்ராவை ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட வைத்துவிட்டு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுத்து விடுவேன். அதற்குப் பிறகு மீண்டும் அவரை இரண்டு போட்டிகளுக்கு கொண்டு வருவேன். இதன் மூலம் அவரது பணிச்சுமையை நிர்வகித்து காயம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வேன். தற்பொழுதும் கூட அவருக்கு ஒரு சின்ன நிக்கில் இருப்பதாக நான் உணர்கிறேன்”
இதையும் படிங்க : கேஎல் ராகுலுக்கு முதலாளி யாருனு விராட் கோலி காட்டுவார்.. அவர சும்மா விடமாட்டார்.. சஞ்சய் பாங்கர் கருத்து
“இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பும்ரா, ஷமி, சிராஜ் மூவரும் இணைந்து சென்றால் அது சிறப்பானதாக இருக்கும். இவர்களால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு தொந்தரவு தர முடியும். தற்போது அணியில் நீக்கப்பட்ட பிறகு மனக்காயம் அடைந்து சிறப்பான முறையில் உருவாகி வந்திருக்கும் சிராஜ் அற்புதமாக இருக்கிறார். எனவே இந்த கூட்டணி இங்கிலாந்துக்கு செல்வது நல்லது” என்று கூறியிருக்கிறார்.






