இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி நான்குக்கு ஒன்று என கைப்பற்றியது. ஆனால் இந்த தொடரில் சில முக்கிய இந்திய நட்சத்திர வீரர்கள் விளையாடவில்லை. அதே சமயத்தில் முதல் போட்டியில் தோற்ற பிறகு இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் விளையாடவில்லை.
இந்திய அணி இப்படி உள்நாட்டில் ஒரு டெஸ்ட் தொடரில் இப்படி பின்தங்கி இருந்த சூழ்நிலையில் கூட, ரஞ்சி டிராபியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அனுபவ வீரர் புஜாராவை இந்திய அணிக்கு தேர்வு செய்ய, இந்திய தேர்வுக்குழு சம்மதிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தார்கள்.
இது குறித்து அப்போது பேசியிருந்த கேப்டன் ரோஹித் சர்மா, நாங்கள் ஆரம்பத்தில் சீனியர் வீரர்களிடம் செல்லலாம் என்று நினைத்தோம், ஆனால் பிறகு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவது என்று எல்லோரும் சேர்ந்து முடிவு செய்து இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக புதிய இந்திய அணியை உருவாக்கும் திட்டத்தில் தேர்வுக்குழு ஈடுபட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது, இன்னொரு பக்கம் இந்திய அணிக்கு தேர்வாகாத மற்றும் காயமடையாத வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது கட்டாயம் என்கின்ற அதிரடியை பிசிசிஐ கொண்டு வந்தது. ஆனால் இந்த விதிமுறையை மீறிய இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது யோசிக்காமல் நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரையும் சம்பள பட்டியலில் இருந்து நீக்கியது.
மேலும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அதன் மூலமாக அவர்கள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குள் நுழைய ஆர்வமாக முயற்சி செய்யவும், இந்திய டெஸ்ட் வீரர்களுக்கான சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்தியது. ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ரூபாய் கிடைத்து வந்த நிலையில் இனி 45 லட்ச ரூபாய் கிடைக்கும். இது ஒரு வருடத்தில் நடக்கும் போட்டிகளில் 75 சதவீத போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு கிடைக்கும். 50 சதவீதம் விளையாடினால் 30 லட்சம் ரூபாயும், பிளேயிங் லெவனில் இல்லாமல் பென்ஞ்சில் இருந்தால் 22.5 லட்ச ரூபாயும் கிடைக்கும்.
தற்பொழுது இது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கும், உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடும் வீரர்களுக்கும், நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுக்க இது உதவி செய்யும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இனி தன்னை சேர்க்கவே மாட்டார்கள் என்கின்ற நிலையிலும், டெஸ்ட் கிரிக்கெட் சம்பள உயர்வு குறித்து பிசிசிஐயை புஜாரா பாராட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க : “பணம் முக்கியம்தான்.. அதுக்காக இப்படி அலையக்கூடாது.. ரோகித் சிறப்பானவர்” – ஹர்திக் பாண்டியா மீது பிரவீன்குமார் விமர்சனம்
இதுகுறித்து புஜாரா கூறும்பொழுது “குடும்பத்துடன் ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கிறேன். மேலும் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐயின் இந்த முயற்சி இன்னும் புத்துணர்ச்சி ஊட்டுகிறது. இது நிச்சயமாக கிரிக்கெட்டின் தூய வடிவத்தில் விளையாடக்கூடிய இந்திய வீரர்களுக்கு ஊக்கத்தையும் நல்ல வெகுமதியையும் கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார.