இந்திய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான மும்பை அணியில் மீண்டும் பிரித்வி ஷாவை தேர்வு செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அவர் இன்ஸ்டாகிராமில் இது குறித்து பதிவிட்டு இருக்கிறார்.
ரஞ்சி டிராபி இரண்டாம் சுற்று போட்டிகள் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் முதலில் மும்பை அணி ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டிக்கான மும்பை அணியில் மீண்டும் பிருதிவி ஷா பெயர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணியில் நீக்கியது ஏன்?
இந்த முறை நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் அனைத்து போட்டிகளிலும் பிருத்வி ஷா விளையாடும் வாய்ப்பை பெற்றார். கால் இறுதிப் போட்டி தவிர அவருடைய பேட்டிங் மற்ற போட்டிகளில் மிகவும் மோசமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் அடுத்து விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி டிராபி இரண்டாம் சுற்று மும்பை அணிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் நீக்கப்பட்டார். இதற்கு காரணம் அவருடைய பேட்டிங் ஃபார்ம் கிடையாது, அவர் ஒழுக்க விதிகளை மீறி பயிற்சிக்கு வராமல் இருந்தது, அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு விடியற்காலையில் திரும்பி வந்தது போன்ற காரணங்களால் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.
ஸ்ரேயாஸ் ஐயர் அறிவுரை
இது குறித்து மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருந்த பொழுது பிருதிவி ஷா மிகவும் திறமையானவர் என்றும், அவர் அடிப்படை விதிகளை பின்பற்றி திரும்பிப் பார்த்தால் அவர் போல மற்றவர்கள் பேட்டிங்கில் செயல்படுவது கடினம் என்றும், ஆனால் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கும் அவருக்கு தான் இந்த விஷயங்களை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : நீங்க நம்ப மாட்டீங்க.. அடுத்த கேப்டன் கில் கிடையாது.. இந்த ரெண்டு பசங்கதான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
இந்த நிலையில் ரஞ்சித் டிராபி இரண்டாம் சுற்று போட்டிகளுக்கு தான் தேர்வு செய்யப்படாதது குறித்து சூசகமாக பதிவிட்டு இருக்கும் பிரிதிவி ஷா தெரிவிக்கும்போது “என்னை விளையாட்டில் இருந்து நீங்கள் வெளியேற்றலாம். ஆனால் நான் உழைப்பதை தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல முன்பு பதிவிட்டதற்கு மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அவருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இதே போல அவர் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






