பிரித்வி ஷா 61 பந்து 134 ரன்கள்; பிசிசிஐக்கு யார் என்று காட்டி மின்னல் வேக சதம்!

0
395
SMAT

இந்திய உள்நாட்டு டி20 லீக் சையத் முஷ்டாக் அலி தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி இந்தியாவின் 6 நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தம் 38 அணிகள் ஐந்து குழுவாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் விளையாடும். இதற்கு அடுத்து அரையிறுதி அடுத்து இறுதிப்போட்டி என்ற முறையில் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது!

குழு ஏ வில் இடம்பெற்றுள்ள அசாம் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஒரு ஆட்டம் இன்று ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற அசாம் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்படி தேர்வு செய்ததற்கு அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே அவர் வருத்தப்பட்டு இருப்பார். காரணம், பிரித்வி ஷா தனது வழக்கமான துவக்க மின்னல் வேக ஆட்டத்தை ஆரம்பித்ததுதான்!

- Advertisement -

முதல் விக்கெட்டை மும்பை சீக்கிரம் இழந்தாலும் பிரித்வி ஷாவின் அதிரடியில் எந்த மாற்றத்தையும் அது உண்டாக்கவில்லை. ஆட்டத்தின் 5-வது ஓவரில் தொடர்ச்சியாக 4, 4, 4, 6, 6, 4 என்று 6 முறை பந்தை எல்லைக்கோட்டை தாண்ட வைத்து 19 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.

வழக்கமாக பவர் பிளே வில் முடிந்தவரை அதிரடியாக ஆடி அணிக்கு ரன்னை தந்துவிட்டு கிளம்புவது இவரின் பாணியாக இருந்தது. ஆனால் இந்த முறை பவர் பிளே தாண்டி தான் நின்றால் என்ன நடக்கும் என்று எதிர் அணிக்கும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் காட்டினார் என்றே கூறலாம்.

பவர் பிளே முடிந்தும் பிரித்திவி ஷாவின் அதிரடி குறையவே இல்லை. தொடர்ந்து பந்தை எல்லைக் கோட்டுக்கு விரட்டிக் கொண்டே இருந்த அவர் 46 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தை அடித்தார். இதில் 10 பவுண்டரி 6 சிக்ஸர்கள் அடக்கம். ஆனால் சதம் அடித்தும் அவர் அதிரடி நிற்கவில்லை. அடுத்த 15 பந்துகள் சந்தித்து 34 ரன்கள் விளாசி, மொத்தம் 61 பந்துகளில் 134 ரன்களை 13 பவுண்டரி 9 சிக்சர்களுடன் நொறுக்கித் தள்ளி பெவிலியன் திரும்பினார். இறுதியில் மும்பை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து இருக்கிறது. இதையடுத்து அசாம் அணி தொடர்ந்து ஆடிய வருகிறது!

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் எல்லா உள்நாட்டு தொடர்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரித்திவி ஷாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை முடிந்தபின்பு இவருக்கு நிச்சயம் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது!