நாளை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்கின்ற நிலையில், இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.
இந்த தொடரின் முதல் போட்டி டையில் முடிவடைய, இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் என்பதால், மூன்றாவது போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும். மேலும் 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி இடம் இந்திய அணி இழந்தது கிடையாது என்கின்ற பெருமை இருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த தொடர் முழுக்க இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தின் ஆடுகளம் முற்றிலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கிறது. எனவே இலங்கை அணி ஒரே ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே வைத்து இரண்டாவது போட்டியை விளையாடி வென்றது.
இதன் காரணமாக இந்திய அணி மூன்றாவது வேகபந்துவீச்சு விருப்பத்திற்கு வைத்திருக்கும் சிவம் துபேவை வெளியில் வைத்து அவருடைய இடத்திற்கு பகுதி நேர ஆப் ஸ்பின்னர் மற்றும் பேட்ஸ்மேன் ரியான் பராக்கை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த முடிவை இரண்டாவது போட்டியிலேயே இந்திய அணி எடுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருக்கும் கேஎல்.ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இவர்களில் இருவரில் ஒருவருடைய இடத்திற்கு இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கொண்டு வரப்பட வேண்டும். ஏனென்றால் மிடில் வரிசையில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதால்தான் முதல் ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் சிவம் துபேவை களம் இறக்கினார்கள்.
மற்றபடி இந்திய அணியில் வேறெந்த மாற்றங்களும் தேவைப்படாது. இந்த இரண்டு மாற்றங்களையும் செய்யும்பொழுது இந்திய அணி குறிப்பிட்ட போட்டி நடைபெறும் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்திற்கு மிகவும் பொருத்தமான அணியாக மாறும்.
இதையும் படிங்க : கோலி சச்சின் இல்லை.. தனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சிக்கந்தர் ராசா.. 1 இந்திய வீரருக்கு இடம்
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :
ரோகித் சர்மா, சுக்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரியான் பராக், கேஎல்.ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.






